
posted 31st October 2022
யுத்தக் காலத்துக்குப் பின்பு பல அமைப்புக்கள் மன்னார் மக்களின் நிலமைகளை அறிந்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றபோதும் எங்கள் கருத்துக்களை உள்வாங்கிச் செல்வோரால் எங்களுக்கு பலன் கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது என மன்னார் பிரiஐகள் குழு உப தலைவரும் மன்னார் சிரேஷ்ட சட்டத்தரனியுமான லயன் எம்.எம்.சபூர்தீன் இவ்வாறு தெரிவித்தார்.
அனுராதப்புரம் கறிற்றாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி மெனட் மெல்லவ அடிகளாரின் தலைமையில் சர்வ மதங்களையும் சார்ந்த 31 நபர்கள் கொண்ட பலதரப்பட்ட பாடசாலை ஆசிரியர் மதத் தலைவர்கள் இருபாலாரும் கொண்ட குழாம் ஒன்று சனிக்கிழமை (29.10.2022) இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு மன்னாருக்கு வருகை தந்திருந்தனர்.
இவ் குழாம் இப் பகுதியில் பலதரப்பட்ட அமைப்புக்களையும் மக்களையும் சந்தித்து மன்னார் நிலைமைகளை அறிந்து செல்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
அந்தவகையில் இவ் குழு சனிக்கிழமை (29) மாலை மன்னார் பிரஜைகள் குழுவினரை சந்தித்து உரையாடினர்.
இதன்போது மன்னார் பிரiஐகள் குழு உப தலைவரும் மன்னார் சிரேஷ்ட சட்டத்தரனியுமான லயன் எம்.எம்.சபூர்தீன் தனது கருத்தில் மேலும் தெரிவிக்கையில்
யுத்தகாலத்துக்குப் பின்பு இங்கு மன்னார் மக்களின் நிலைமையை அறிந்து செல்வதில் மதத் தலைவர்கள் மற்றும் வேறு அமைப்பினர்கள் உங்களைப் போன்று எம்மை தரிசித்துச் செல்லுகின்றனர்.
இதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் எங்கள் கருத்தக்களை உள்வாங்கிச் செல்வோரால் மன்னார் மாவட்டத்துக்கோ அல்லது எமது சிறுபான்மை மக்களுக்கோ இதுவரை எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாக எங்களுக்கு தெரியவில்லை.
இந்த நாட்டில் எல்லோரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள். ஆனால் சிறுபான்மை மக்களை அடக்கி ஆளும் நோக்குடன் பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட மக்கள் இன்னும் எவ்வித விசாரனைகளும் இன்றி சிறையில் வாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
தற்பொழுதுதான் பெரும்பான்மை இனம் இவ் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை உணரத் தொடங்கியுள்ளது.
தொல்பொருள் திணைக்களம் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் இவ் பகுதி மக்களின் நிலங்களை அபகரித்தவண்ணம் செயல்பட்டு வருகின்றது.
அத்துடன் மதத்தளங்களையும் அபகரிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் எமது மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் நாம் மொழியால் மதத்தால் வேறுபட்டு இருக்கின்றபோதும் நாம் அனைவரும் இந் நாட்டு மக்களே.
வேறு நாடுகளில் அங்குள்ள மக்கள் ஒரு நாட்டு மக்கள் என்ற உணர்வுடன் இருப்பதால் அவ் நாடுகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
ஆனால் எம் நாட்டில் பொழி வேற்றுமையால் சிறுபான்மை மக்களை நசுக்கும் எண்ணத்தடன் ஈடுபட்டு வருவதால் எம் நாடு பெரும் அபாய நிலைக்கு சென்று கொண்டிருப்தை நாம் யாவரும் உணரத் தொடங்கியுள்ளோம்.
இந்த நாட்டில் நாம் எல்லோரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். ஆனால் இன்னும் பௌத்த மதத் தலைவர்கள் துவேஷத்துடன் செயல்பட்டு வருகின்றனர் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)