நிரந்தரமான கட்சி முஸ்லீம் காங்கிரஸ் கட்சியென மனதில் பதியவேண்டும்

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை ஊறுகாய் போன்று பாவிக்காது இக் கட்சி ஒரு நிரந்தரமான கட்சி என்ற உணர்வு எமக்கு இருக்க வேண்டும். மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமல்ல தமிழ் கட்சிகள் யாவும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளது. இதனூடாக எமது கட்சியுடன் அவர்களுக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது என ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் றவூப் ஹகீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி றவூப் ஹகீம் மன்னார் மாவட்டத்தில் தனது கட்சியை புனமைப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால முன்னெடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல் நோக்கமாகக் கொண்டு சனிக்கிழமை (15.10.2022) மன்னாருக்கு விஐயத்தை மேற்கொண்டிருந்தார்.

இங்கு ஓய்வு பெற்ற கிராம அலுவலகர் எம்.எச்.எம். தாஜீதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் றவூப் ஹகீம் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மன்னார் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி அழிந்து போகாது இவற்றை புனரமைத்து மக்கள் மத்தியில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று பல ஜீவன்கள் இங்கு துடித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இன்று எமது கட்சியின் இக் கூட்டத்தின் நோக்கம் புனரமைக்கப்பட்டு நாம் புதிய பாதையில் செல்ல வேண்டும் எனபதே ஆகும்.

இங்கு ஒரு தனிப்பட்ட மனிதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு இல்லை. ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வளர வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கின்றது என்பதே புலனாகின்றது.

கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகள் எமது கட்சிக்குள் மட்டுமல்ல. பெரிய பெரிய கட்சிகளுக்குள்ளேயே குறிப்பாக தமிழ் தேசியக் கூடடமைக்குள்ளேயே பெரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.

நாம் பலவீனமாக இருக்கின்றோம் என எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் நாம் வளர வேண்டும் என வெளியிலுள்ள கட்சிகள் விரும்புகின்றன.

இதில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றாகும். இதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக எமது கட்சி இஸ்ஸதீனை நியமித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமல்ல, தமிழ் கட்சிகள் யாவும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளன. இதனூடாக எமது கட்சியுடன் அவர்களுக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்பதை எடுத்தக் காட்டுகின்றது.

எமது கட்சியை பலவீனப்படுத்த எண்ணியவருக்கு இன்று எல்லோரும் விரோதிகளாக காணப்படுகின்றனர்.

இப்படியான விரோதிகளோடு சென்ற முறை நாம் கூட்டுச் சேர்ந்ததுதான் எமக்கு கவலை.

கல்முனை எல்லை விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பாரிய முரண்பாடு காணப்பட்டு வருகின்றது நாம் அறிவோம்.

ஆனால் தலைமை சொன்னதுக்கு இணங்க அங்கு மேயர் பதவிக்கு பலரும் முஸ்லீம் காங்கிரஸிக்கு ஆதரவளித்தார்கள்.

மன்னாரில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் ஒருவரே. அவர்தான் மன்னார் பிரதேச சபை தவிசாளர் இஸ்ஸதீன்.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சி முசலியில் பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றுவதற்கு அந்நேரம் சந்தர்ப்பம் இருந்தும் கைநழுவியது.

ஆனால் மன்னார் பிரதேச சபையை கைப்பற்ற எமது கட்சிக்கு எண்ணம் இல்லாதபோதும் இறைவன் அருள் எமக்கு கிடைத்து விட்டது.

மன்னாரில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி பின்டைவுக்கு காரணம் கடந்த தேர்தலில் எமது கட்சி ரிசாட் பதியுதீனுடன் சேர்ந்ததே காரணமாகும்.

விகிதாசார தேர்தல் ஒரு விசித்திரமானது. இந்த தேர்தலில் என்னமோ நடக்கும்.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை ஊறுகாய் போன்று பாவிக்காது இக் கட்சி ஒரு நிரந்தரமான கட்சி என்ற உணர்வு எமக்கு இருக்க வேண்டும்.

ஆகவேதான் நாம் இப்பொழுது இங்கு ஒரு திட்டமிடலை முன்னெடுப்பதற்காக ஒன்றுகூடியுள்ளோம்.

முன்று மாதத்துக்கு ஒருமுறையாவது தலைமைத்துவம் இங்கு வந்து செல்ல வேண்டும் என எதிர்பார்த்து இருக்கின்றீர்கள். ஆனால் இந்த மூன்று மாதத்தில் இங்குள்ள தலைமைத்தும் எவ்வாறு ஓடுகின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தாங்கள் ஒரு அமைச்சை பெற்றுக் கொள்ளலாம் என ஒவ்வொருவரும் தப்பாசைக் கொண்டு தனிக் கட்சிகளை உருவாக்கி வருவதையும் பார்க்கின்றோம்.

ஆனால் இவர்கள் சமமாக உட்கார ஆசனங்கள் கிடைத்தாலும்கூட இயற்கை ரீதியாக மக்கள் மத்தியில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு செல்வாக்கு கொண்ட கட்சியாகவே திகழ்கின்றது என்பதை நாம் மறக்கக்கூடாது.

எமது கடசியின் ஸ்தாபகர் அஸ்ரப் அவர்கள் தனிப்பட்ட முறையில் முஸ்லீம் மக்கள் பிரச்சனைகளை மட்டும் நோக்கவில்லை. மாறாக நாட்டிலுள்ள யாவரின் பிரச்சனைகளையும் நோக்கினார்.

இப்பொழுதுள்ள பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதில் முஸ்லீம் சமூகம் என்ன செய்யலாம் என்ற ஒரு எண்ணப்பாடு உருவாகியுள்ளது. இதைப்பற்றி விரைவில் நாம் ஆராய இருக்கின்றோம்.

நாட்டில் இந் நிலை ஏற்பட்டதுக்கு காரணம் அரசியல் வாதிகள் தங்கள் பொக்கற்களை நிரப்புவதற்கு நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டனர். இதில் இம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகளும் உள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்தார்.

நிரந்தரமான கட்சி முஸ்லீம் காங்கிரஸ் கட்சியென மனதில் பதியவேண்டும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)