நிந்தவூர் கலை, இலக்கிய பேரவை அனுதாபம்

“ஈழத்து இலக்கியப் பரப்பில் அமரர் தெளிவத்தை ஜோஸப்பின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலக்கியப் படைப்பாளிகள், ஆர்வலர்களைப் பெரும் துயரிலும் ஆழ்த்தியுள்ளது”
இவ்வாறு நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் தலைவரும், கவிஞருமாhன டாக்டர். ஏ.எம். ஜாபிர் கூறினார்.

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில், மூத்த எழுத்தாளர் சாஹித்தியரத்னா தெளிவத்தை ஜோஸப் பின் மறைவுக்கான அனுதாப பிரேரரணை ஒன்றை முன்மொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பேரவையின் மாதாந்தக் கூட்டம் நிந்தவூர் அரசடித் தோட்டம் ஜாபிர் மஹாலில் பேரவையின் தலைவர் டாக்டர் ஜாபிர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, அமரர் தெளிவத்தை ஜோஸப்பின் மறைவுக்கு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மறைவு தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் பிரரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனுதாப பிரேரணையை முன்மொழிந்து பேரவையின் தலைவர் டாக்டர். ஜாபிர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இலங்கை தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியான மலையக இலக்கியத்தின் முக்கிய படைப்பாளராகவும், இலக்கிய விமர்சகராகவும், இலங்கையில் தமிழ் படைப்பிலக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்வதர்களுள் முதன்மையானவராகவும் அமரர். தெளிவத்தை ஜோஸப் திகழ்ந்தார்.
படைப்பாளர், விமர்சகர், பதிப்பாளர் எனப் பல தளங்களில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அளப்பரிய பங்காற்றிய அமரர் தெளிவத்தை ஜோஸப், இலங்கை தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றிய பெருந்தகையாவார்.

“காலங்கள் சாவதில்லை” என்பது இவரது முக்கியமான நாவல் ஆகும். அவரது ஆய்வு நூல்களான 20 ஆம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாறு, மலையக சிறுகதை வரலாறு ஆகியவை அவரை சிறந்த ஆய்வாளராக அடையாளப்படுத்தியதுடன், நாமிருக்கும் நாடே எனும் அவரது சிறு கதைகள் தொகுப்பிற்காக இலங்கை சாஹித்திய விருதையும் பெற்றுக்கொண்டழமையும் குறிப்பிடத்தக்கது.

மலையக மண்ணில் தோன்றி தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறுபட்ட தளங்களில் அளப்பரிய பங்களிப்புச் செய்த அவரது இழப்பு உலகின் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என்றார்.

பேரவை உறுப்பினர்களான எம்.ஐ. உசனார் சலீம், தம்பிலெவ்வை இஸ்மாயில் (பொறியியலாளர்), புதுநகரான அஷ்ரப், கவிஞர் அன்வர்டீன், கவிஙர் மக்கீன் ஹாஜி உட்பட மேலும் சிலரும், அனுதாக பிரேரணை மீது உரையாற்றினர்.
இதேவேளை பேரவையின் செயலாளர் தம்பிலெவ்வை இஸ்மாயில் (பொறியியலாளர்) அவர்களால் முன்வைக்கப்பட்ட புக்கர் விருதுவென்ற இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்வைப் பாராட்டும் பிரேரணையும் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் கலை, இலக்கிய பேரவை அனுதாபம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)