நமது வாழ்க்கை சமூக்திற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் - அருட்பணி எம்.டேவியன் கூஞ்ஞ

நமது வாழ்வைப் பார்த்து சமூகம் ஏற்று நல்வழி செல்ல நாம் வழி சமைக்க வேண்டும். மக்கள் எம்மை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எமது வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது நாம் சமூக பற்றுக் கொண்டவர்களாக நல் நோக்கத்துக்காக செயலில் இறங்கும் பட்சத்தில் சமூகம் ஏற்றுக் கொண்டு மனம்மாற வழி பிறக்கும் இளைஞர்களும் நல் வழியில் பயணிக்க ஏதுவாகும் என அருட்பணி எம்.டேவியன் கூஞ்ஞ அடிகளார் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

பேசாலை பகுதியில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியமானது நாட்டில் குறிப்பாக தங்கள் கிராமத்தில் தலைதூக்கி வரும் சமூக சீரழிவை தடுக்கும் நோக்குடன் இளைஞர்களாகிய தாங்கள் நல்வழி செல்வதற்கு இங்குள்ள புத்திஜீகளை அழைத்து ஆலோசனை பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அருட்பணி எம்.டேவியன் கூஞ்ஞ அடிகளார் தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவிக்கையில்;

இன்று பேசாலை இளைஞர் சமூகம் தாங்களாகவே உணர்ந்து தாங்கள் வழி தெரியாது நிற்கின்றோம்; புத்தி ஜீவிகளே எங்களுக்கு வழிகாட்டுங்கள் என்று உணர்ந்தவர்காக புத்திஜீவிகளை அழைத்திருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இப் பகுதியில் முதல் தடவையாக நீங்கள் இந்த சமூகத்தை நோக்கி இவ்வாறான அழைப்பை விடுத்துள்ளீர்கள்.

இன்றைய எமது மண்ணின் சூழலை நாம் உற்று நோக்கும்போது அன்றைய காலத்தை விட இன்றைய சூழல் வேதனைக்குரியதுதான்.

ஒரு தனிப்பட்ட மனிதன் சமூக அக்கறையின்மையாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

இங்குள்ள மக்கள் நல்லவர்கள்; சமூகப் பற்றுள்ளவர்கள்; பல திறமைகளை கொண்டவர்கள்தான் பேசாலை மக்கள்.

ஆனால், இவர்கள் இன்று ஒரு சமூகமாக ஒன்றிணைக்கப்படாத நிலையே காரணமாக காணப்படுகின்றது.

பல தடவைகள் நமது சமூக விழிப்புணர்வும், அர்ப்ணமும் மற்றவர்களால் திணிக்கப்பட்டு வருகின்றது. நாம் ஒன்றிணைந்து சுயமாக செயல்படுவதில் பின் தள்ளப்பட்டு வருகின்றோம்.

இன்று நமது மண் பலவற்றை இழந்து நிற்பது வேதனைக்குரியதாக இருக்கின்றது.

பல தடவைகள் சமூக விழிப்புணர்வும், அர்ப்ணமும் தற்காலிகமாகவே காணப்படுகின்றது. இந்த கூட்டமும் இன்றுடன் முடிவுக்கு வரலாம்; எமது அர்ப்ணத்துக்கும் அக்கறைக்கும் குழப்பம் எற்படலாம்.

இவற்றை எதிர் கொண்டுதான் நாம் செயல்பட வேண்டும். அடுத்தது, எமக்குள் பலரிடம் சுயநலம் காணப்படுகின்றது.

நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, எமது உரையாடுதலின்போது பாவிக்கும் வார்த்தைகள் சரியான முறையில் வடிவமைக்கப்படாது இருக்குமாகில் இதுவும் சமூகப்பற்றுக்கு ஒரு தடைக்கல்லாக மாறுகின்றது.

இன்று எமது மண்ணில் போதை வஸ்துக்கள் தாண்டவமாடினாலும் அல்லது எதாவது பிரச்சனைகள் காணப்பட்டாலும் முதலில் சிலுவையில் அறைப்படுவது பங்குச் சபையும், பங்கு தந்தையுமே.

சமூகம் சார்ந்த விழுமியங்களை கவனிப்பதற்கு அதற்கு தலைமை தாங்கி நடாத்துவதற்கு எதிர்ப்புகளுக்கு முகம் கொடுப்பதற்கு நாம் முன் வருவோமானால் அதுவே பெரிய வெற்றியாக இருக்கும்.

முதலில் செவிமடுக்கும் கலாச்சாரம் ஒவ்வொருவருக்கும் அவசியம் குறிப்பாக இளைஞர்களுக்கு அவசியம்.

அடுத்து வழி நடத்தும் கலாச்சாரம் ஒரு குழுவாக உருவாக வேண்டும். அத்துடன் சமூகத்தில் உருவாகின்ற சீரழிவை நாம் தொடக்கத்திலேயே பார்க்கின்றபோது சந்திக்கின்ற போது இதற்கு புத்திஜீவிகள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு செயல்பாட்டில் இறங்க வேண்டும்.

மற்றது எம்மைப் பார்த்து மற்வர்கள் பின்பற்றக் கூடியவர்களாக நாங்கள் வாழ வேண்டும். அதற்கு நாம் தியாகம் செய்ய வேண்டும்.

குடும்பத்தில் மட்டுமல்ல, சமூகத்துக்காகவும் நாம் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் எம்மில் உருவாக வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமைகள் கொண்டவர்களாக இருக்கின்றோம். ஆகவே, நாம் யாவரும் ஒரு நீண்ட திட்டத்திலே ஒன்றிணைந்து நல்வழிக்கு கொண்டு செல்லும் குழுவாக அமையும்போது இளைஞர்கள் தற்பொழுது முன்னெடுத்து இருக்கும் இவ் வித்து வெற்றி அளிக்கும். இளைஞர்களும் உங்களை தியாகம் செய்ய வேண்டும் என இவ்வாறு தனது ஆலோசனைகளை வழங்கினார்.

நமது வாழ்க்கை சமூக்திற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் - அருட்பணி எம்.டேவியன் கூஞ்ஞ

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)