
posted 1st October 2022
ஜனாதிபதி ரணில் மற்றும் அவரது கை பொம்மைகளான ராஜபக்சக்கள் நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து வழிகளும் தோல்வி அடைந்த நிலையில் மக்கள் ஆணையை ஏற்று தேர்தலுக்குச் செல்வதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை (01) யாழில் உள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஆட்சி அதிகாரத்திலிருந்து ராஜபக்சக்களை மக்கள் விரட்டியடித்த நிலையில் தந்திரமான முறையில் மக்கள் ஆணை பெறாத ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார்.
நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டையும், நாட்டு மக்களையும் திருப்தி படுத்த முடியாது. ராஜபக்சர்களை திருப்திப்படுத்தும் ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகிறார்.
நாளுக்கு நாள் பொருட்களின் விலையேற்றம், பொருட்களின் தட்டுப்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றது.
தற்போது நாட்டில் வறுமை அதிகரித்துள்ள நிலையில் பல சிறுவர்கள் ஒருவேளை உணவு உண்பதில் கூட பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுகிறோம், நிதி வரப் போகின்றது என பதவியேற்ற நாளிலிருந்து கூறிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெற முடியாமல் உள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 2.5பில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்கப் போவதாக கூறினாலும் அவர்களின் நிபந்தனைகளை ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்த சம்மதித்தால் மட்டுமே நிதி கிடைக்கும்.
நாடு பொருளாதாரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமது பதவிகளையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதற்காக அதிக அளவிலான அமைச்சரவையை நியமித்துள்ளார்கள். இனியும் நியமிக்க உள்ளனர்.
அதுமட்டுமல்லாது ரணில் விக்கிரமசிங்க தனது மாமனாரான ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அடக்குமுறை விளையாட்டுக்களை கையில் எடுத்துள்ள நிலையில் அதற்கு மக்கள் அடி பணியைப் போவதில்லை.
மக்கள் என் ஜனநாயகப் போராட்டங்களை சர்வாதிகார தன்மையுடன் அடக்குவது மக்கள் போராட்டம் செய்யும் இடங்களுக்கு தடை விதிப்பது, போராட்டக்காரர்களை கைது செய்வது என தனது மாமா செய்ததைப் போன்று அடக்கி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்.
மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாங்கள் கூறுகிறோம், நாட்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் முழுமையாக இடம்பெறவில்லை.
மக்கள் விரும்பியதைப் போன்று ராஜபக்க்ஷக்கள் விரட்டியடிக்கப்பட்டாலும் அவர்களின் செல்லப் பிள்ளையான ரணில் ராஜபக்க்ஷவும் விரட்டியடிக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
ஆகவே தான், ரணில் ராஜபக்க்ஷக்களினால் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியாது என தெளிவாக மக்களுக்கு புலப்பட்டுள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்ததை போன்று முழுமையான மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கு நாட்டு மக்கள் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வதையே விரும்புகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY