
posted 18th October 2022
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) பணிமனை முன்பாக நீதி கோரி இன்று (18) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், “காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக வழங்கப்படும் இழப்பீடு எமக்கு வேண்டாம். சர்வதேச விசாரணையே தேவை”, என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை, “13 வருடங்களாக நாம் வீதிகளில் அலைந்து திரிகின்றோம். எங்களுக்காக குரல் கொடுக்க நாட்டில் யாரும் இல்லை. அதனால்தான் நாம் சர்வதேசத்தை நாடுகின்றோம்.
ஆனாலும், இப்போது சர்வதேசமும் எமக்கு கண் துடைப்பாகவே காணப்படுகிறது. இப்போது எமக்கு லஞ்சம் கொடுக்க அரசு முனைகிறது. எங்களுடைய பிள்ளைகளின் பெறுமதி உங்களுக்குத் தெரியாது. எமக்கு உங்களின் லஞ்சம் வேண்டாம். இப்போது ஓர் உயிருக்கு 2 இலட்சம் ரூபாய் தருகின்றோம் என்று சொல்கிறார்கள். இந்தப் பணம் எமக்கு வேண்டாம். நாம் உங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் தருகின்றோம். எங்கள் பிள்ளைகளை எமக்கு திருப்பி தருவீர்களா?, என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)