
posted 1st November 2022
காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தர முற்படுங்கள் அதற்காக எங்கள் பிள்ளைகளுக்கு விலை பேசாதீர்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.
மன்னாரில் காணாமல ஆக்கப்பட்ட அலுவலகத்தின் முன்னால் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.
திங்கள் கிழமை (31.10.2022) காலை 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மெசிடோ அமைப்பின் இணைப்பாளர் . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இனையத்தின் (போரம்) மன்னார் மாவட்ட இணைப்பாளர் . வாழ்வுரிமை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்
இது தொடர்பாக மன்னார் மாவட்டத்தல்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்பின் தலைவி மனுவேல் உதயச்சந்திரா தெரிவிக்கையில்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எமக்குத் தேவையில்லையென ஏற்கனவே நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.
அப்படியிருந்தும் அவர்கள் இந்த அலுவலகத்தை திறந்து எங்களுக்க திணித்தனர். ஏற்கனவே நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் சாலியப் பீரீஸ் அவர்களை நேரடியாக சந்தித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சிலரின் விபரங்களை கையளித்து இருந்தோம்.
இவர்களை தேடிப் பார்த்து அவர்களின் விபரங்களை எமக்கு தரும்படி. ஆனால் இன்றுவரை அதற்கான எந்த விபரங்களும் எமக்குத் தரப்படவில்லை.
இந்த நிலையில் முன்னையவர் மாற்றம் பெற்று சென்று விட்டார். இப்பொழது ஒரு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் இன்றைய கூற்று எவரும் காணாமல் ஆக்கப்படவில்லை என்றும் காணாமல் போனவர்கள் யாவரும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர் என்றும் இதனால் இங்கு இவர்களுக்கு படுகொலை ஒன்றும் நடைபெறவில்லையென தெரிவித்துள்ளார்.
அப்படி இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள் என்றால் நீங்கள் அவர்களின் விலாசம் தொலைபேசி இலக்கங்களைத் தந்தால் நாங்கள் சென்று அவர்களை தேடிப் பார்ப்போம் என தெரிவித்துள்ளோம்.
இதுமட்டுமல்ல காணாமல் போன எங்கள் பிள்ளைகளுக்கு மரண சான்று பத்திரமும் பணம் இரண்டு லட்சம் ரூபா தருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த சன்மானங்களையும் மரண சான்று தருவதற்கும் இவர்கள் யார் என்ற கேள்வியை கேட்டு நிற்கின்றோம்.
நீங்கள் தரும் இரண்டு லட்சத்துக்குப் பதிலாக நாங்கள் நான்கு லட்சம் ரூபா தருகின்றோம் நீங்கள் எங்கள் பிள்ளைகளை காட்டுங்கள் என தெரிவித்து நிற்கின்றோம்.
அப்படியில்லையென்றால் நீங்கள் எங்களுடன் கதையுங்கள் நாங்கள் உங்களுக்கு தக்க பதில் தருகின்றோம். எமது பிள்ளைகள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என விரிவாக மீண்டும் உங்களுக்கு தெளிவுப் படுத்துகின்றோம்.
ஆகவே நீங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு விலை பேச வேண்டாம் என தெரிவித்து நிற்கின்றோம்.
நீங்கள் எங்களுக்கு தக்க பதில் தராவிட்டால் எங்கள் போராட்டம் இத்துடன் நிற்கப் போவதில்லை. இது தொடர்ந்து நடைபெறும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் தலைவி திருமதி மனுவேல் உதயச்சந்திரா இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)