
posted 5th October 2022
யாழ். நகரை அண்மித்த பண்ணை பூங்கா, கோட்டை பகுதிகளில் கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவோரை எச்சரித்து அனுப்பினர் மாநகர பிரதி முதல்வர் து. ஈசன் தலைமையிலான மாநகர சபை உறுப்பினர்கள்.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் சிலரும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றமை அவதானிக்கப்பட்டதாகவும், நகரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இது விடயத்தில் அவதானத்துடனும் விழிப்புடனும் செயல்படுமாறு பிரதி முதல்வர் ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேசமயம், பொதுமக்கள், சிறுவர்கள் அதிகம் வந்து செல்லும் பண்ணை பூங்கா பகுதியில் பாலியல் ரீதியான செயல்பாட்டில் ஈடுபட்ட 40 வயது மதிக்கதக்க இருவரை நேற்று முன்தினம் அந்தப் பகுதிக்கு சென்ற பிரதி முதல்வரும், அவருடன் சென்ற குழுவினரும் கடுமையாக எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
இதன்போது, அநாகரிக செயல்பாட்டில் ஈடுபட்ட ஆண் தனக்கு கொழும்பில் பொலிஸில் ஆள் உள்ளதாகக் கூறி பிரதி முதல்வர் தலைமையிலான குழுவினரை மிரட்டும் பாணியில் முரண்பட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பிரதி முதல்வர் கூறுகையில்,
யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் என்ற வகையில் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவும், பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் அடிப்படையிலும் நேற்று (நேற்று முன்தினம்) யாழ்ப்பாணம் கோட்டை, அதனை அண்டிய பகுதிகளான கடற்கரைப் பூங்கா அதாவது பண்ணைப் பூங்கா, ஆரியகுளம், புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம், யாழ்ப்பாணம் கோட்டையை அண்டியதாக வெளிப்புறத்திலுள்ள சுற்றுச் சூழல்கள், ரெலிக்கொம் சுற்றுப்புறச் சூழல்கள் எல்லாம் எனது தலைமையில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை பணியாளர்களும், சல்லடை போட்டு தேடினோம்.
இதன்போது பலர் சோடிகளாக அங்கிருந்தமையை அவதானிக்க முடிந்தது. இதைவிட, இளைஞர்கள், மதுபானம் அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமையும் அவதானிக்க முடிந்தது. எம்மைக் கண்டவுடன் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டனர்.
அத்தோடு, முனியப்பர் கோவிடியால் செல்கின்ற பாதை மற்றும் முனியப்பர் கோவிலுக்கு வடக்காக உள்ள பாதையிலும் இளைஞர்கள் அதிகளவில் கூடுவதையும், போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுதல், பெண்களைக் கூட்டிச் சென்று அநாகரிகமான செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் எங்களால் அவதானிக்க முடிந்தது. அந்தப் பகுதிகளில் உள்ளாடைகள் இருந்ததைக் கூட எங்களால் அவதானிக்க முடிந்தது.
காலை 8. 30 மணியளவில் சுற்றி வளைப்பு நடவடிக்கையை ஆரம்பித்து பிற்பகல் 2. 30 மணிவரை அந்தப் பணியை முன்னெடுத்திருந்தோம். இதன்போது, பாடசாலை மாணவர்களும் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் எங்களால் அவதானிக்க முடிந்தது.
யாழ்ப்பாணத்துக்கு படிப்பதற்காக பெற்றோர் பிள்ளைகளை அனுப்பி வைக்கின்றனர். தூர இடங்களில் இருந்தும் பலர் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்வி கற்க வருகின்றனர். எங்களை நம்பியே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் எதிர்காலத்துக்கு நாங்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்தான். அந்த அடிப்படையிலேயே பாடசாலை மாணவிகள், மாணவர்கள் இவ்வாறான பாலியல் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூகச் சீரழிவான செயல்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்க முற்பட்டோம்.
எனினும், யாழ்ப்பாண நகரத்துக்கு கல்வி கற்க வரும் பாடசாலை சிறார்கள் குறிப்பாக பெண் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் விழிப்பாக இருப்பதோடு, அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து சமூக சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த யாழ். மாநகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)