
posted 27th October 2022
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம், கொந்தளிப்பு நிலை காரணமாக கடல் மீன்பிடி முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
வங்காள விரிகுடாப் பகுதியில் ஏற்பட்ட கால நிலை மாற்றம் காரணமாக குறித்த கடல் சீற்றம், கொந்தளிப்பு மற்றும் கடல் பெருக்க நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலமை காரணமாக கடற்றொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழிலையே நம்பி வாழும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த சில வாரகாலமாக இடம்பெற்று வந்த அமோக கடல் மீன்பிடி இந்த நிலமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடல் மீன்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
அமோக மீன்பிடி இடம்பெற்று வந்த கரைவலை மீன்பிடியாளர்கள் மட்டுமன்றி, இயந்திரப் படகுகளைக் கொண்ட ஆழ்கடல் மீன்பிடியாளர்களும் திடீரென மீன்பிடி நடவடிக்ககைளை நிறுத்தியுள்ளனர்.
இதேவேளை கடல் பெருக்கமும் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கரையில் நிறுத்தப்பட்டு வந்த தமது கரைவலைத் தோணிகளையும், இயந்திரப் படகுகளையும், கரையை விட்டும் மேட்டுப் பகுதிகளுக்கு நகர்த்தி நிறுத்தி வைத்துமுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)