எதிர் காலத்திற்கு ஏற்றவர்களாக சிறுவர்கள் புடம் போடப்பட வேண்டும்.

“நாட்டின் வருங்கால பிரஜைகளான இன்றைய சிறுவர்கள், எதிர்காலத்திற்கு ஏற்றவாறு புடம் போடப்பட வேண்டும். இதனைப் பொறுப்புணர்ந்து நாம் முன்னெடுக்க வேண்டும்.”

இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எம்.ஏ.எம். தாஹிர் கூறினார்.

நிந்தவூர் அமீர்மேசா ஞாபகார்த்த பொது நூலகத்தினால், தேசிய வாசிப்புமாத நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு கூறினார்.

நூலகர் ஜனாபா. நசீறா அப்துல் லதீப் தலைமையில், நிந்தவூர் சிறுவர் பூங்கா திறந்த வெளி அரங்கில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை மற்றும் நெல்லித்தீவு ஹிக்மா பாலர் பாடசாலை என்பவற்றின் இணை அனுசரணையுடன் இந் நிகழ்வு இடம்பெற்றதுடன், நிகழ்வில் பாலர் கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன.

தவிசாளர் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில், பின்வருமாறு கூறினார்,

“சிறுவர்களின் முக்கியத்துவம், அவர்களை எதிர்கால நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டியதன் அவசியம் என்பவற்றை உணர்த்தும் வகையில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் மீதான பார்வையும், அவர்கள் மீதான கவனமும் கொண்டவர்களாக நாம் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

இதன் மூலம் ஒழுக்கமான விழுமியமிக்க சமூகத்தை உருவாக்கும் குறிக்கோளுடனான இலக்கில் பயணிப்பதும் அவசியமாகும்.

இன்று நாட்டின் பொருளாதார நெருக்கடி சிறுவர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள துர்ரதிஸ்ட நிலமை உள்ளது.

நாட்டின் எதிர்காலப் பிரஜைகளான சிறுவர்களின் இயல்பு வாழ்க்கை பறிக்கப்பட்ட நிலைமையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறார்களின் வாழக்கை சிறப்பானதாக அமையவும், உரிமைமிக்கவர்களாகவும் வாழ நாம் வழிகாட்டவேண்டும்.

அத்துடன் எதிர்காலத்திற்கு ஏற்றவர்களாக சிறுவர்கள் இப்போதிருந்தே புடம் போடப்படவும், நாம் ஆவன நடவடிக்கைகளையும், செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் உட்பட மேலும் பலரும் உரையாற்றினர்.

எதிர் காலத்திற்கு ஏற்றவர்களாக சிறுவர்கள் புடம் போடப்பட வேண்டும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)