எங்கே கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உயரதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது என மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார்.

கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு பொதுமக்களால் அவரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து கருத்துரைத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்தவாரம் பொது மக்கள் குறித்த குடிநீர் திட்டத்தை விரைந்து ஆரம்பிக்குமாறு என்னிடம் எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை
முன்வைத்தனர். இந்த பிரதேசங்களில் இரண்டு வீதமானவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு பிரச்சினை உண்டு காரணம் நீர். எனவேதான் அனைவரினதும் முயற்சியின் பயனாக கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பதற்கு 12.01.2022 ஆம் திகதி பத்திரிகையில் கேள்வி கோரல் விளம்பரம் செய்யப்பட்டு 11.02.2022 வரை விண்ணப்ப முடிவு திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை உலக வங்கி ஒதுக்கீடு செய்ததாகவும் நாம் அறிகின்றோம்.

ஆனால் இன்றுவரை இத்திட்டத்திற்கான எவ்வித பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த பிரதேச மக்கள் வறட்சிக் காலங்களில் குடிநீரை கூட பெற்றுக்கொள்ள முடியாத அளவில் கடும் நெருக்கடிகளை வருடந்தோறும் எதிர்கொண்டு வருகின்றனர். சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையும் வருடந்தோறும் அதிகரித்துச் செல்கிறது. எனவேதான் உலகவங்கியின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பலர் நிலைமைகளை ஆராய்ந்து இத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டனர். ஆனால் அந் நிதிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவ்விடயம் தொடர்பில் எமக்கு பலத்த சந்தேகம் உண்டு. குறித்த நிதியானது கொழும்பு மட்ட உயரதிகாரிகளால் தென்னிலங்கைக்கு மாற்றப்பட்டுவிட்டதாக நாம் அறிகின்றோம். எனவே குறித்த விடயம் தொடர்பில்
அதிக கவனம் செலத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஐனாதிபதியின் செயலாளர், பொறுப்பான அமைச்சர், வடக்கு ஆளுநர் உள்ளிட்ட பலருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளோம் எனவும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மா. தயானந்தன் தெரிவித்துள்ளார்.

எங்கே கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)