
posted 9th October 2022
எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு சட்டம் ஊடாக இந்த நாட்டை சீரழித்த மகிந்த ராஜபக்ஷ குடும்பம் உட்பட இந்த அரசாங்கத்துடன் இணைந்த அனைவரும் புனர்வாழ்வளிக்கப்படவேண்டியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை விட மோசமான புனர்வாழ்வளித்தல் சட்டத்தினை கொண்டுவர அரசாங்கம் முற்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி நேற்று (சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியம் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அனைத்துவித வன்முறை சட்டங்களையும் உடனடியாக நீக்கக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.
மட்டக்களப்பு காந்தி பூங்ககா முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக கல்முனை வீதியூடாக கல்லடிப்பாலம் விளையாட்டு மைதானத்தினை அடைந்து அங்கு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
“இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்பது கடந்த 40 வருடங்களாக தமிழ் பேசும் மக்களை அடக்கியாண்ட சட்டமாகும். 2019ஆம் ஆண்டு தொடக்கம் இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமிய மக்களும் அடக்கப்பட்டார்கள்.
2022ஆம் ஆண்டு இந்த சட்டத்தின் மூலம் சிங்கள மக்களையும் கைது செய்து அடக்கு முறைகளை முன்னெடுத்தனர். தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இந்த சட்டம் மிக மோசமான சட்டம் இந்த சட்டத்தினை நீக்கவேண்டும்.
இந்த சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அநீதிகள் நடக்கின்றது என்ற போது ஒரு சிலர் பார்வையாளராகயிருந்தாலும் கூட இன்று பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்படும் போது இன்று அவர்களுடன் இணைந்து இந்த சட்டத்தினை நீக்கவேண்டும் என்று போராடி வருகின்றோம்.
கடந்த 25 நாட்களுக்கு மேலாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப்போராட்டத்தினை செய்திருந்தோம். அந்த போராட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்தவர்களையும் இணைத்தே முன்னெடுத்தோம்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் அதன் ஏற்பாட்டாளரான தேரர் போன்றவர்கள் 50 நாட்களுக்கு மேலாக தடுத்து வைத்துள்ளவர்கள். உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் இதே சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
50 நாட்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு போராட்டம் நடாத்தும் இதே மேடையில் எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY