
posted 11th October 2022
வடக்கு மாகாணத்தில் கல்வி கற்று உயர் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் கட்டாயமாக வடக்கு மாகாணத்திலே கடமையாற்ற வேண்டும். உங்களுடைய மாகாணத்தை முன்னேற்றுவதற்கு உங்களாலான பங்களிப்பை செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவித்துள்ளார் வட மாகாணத்தின் பிரதம செயலாளர் சமன் பந்துலசேன.
யாழ். கல்வி வலயத்தில் உயர்தர மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் கல்வி கற்று உயர் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் கட்டாயமாக வடக்கு மாகாணத்திலேயே கடமையாற்ற வேண்டும். உங்களுடைய மாகாணத்தை முன்னேற்றுவதற்கு உங்களாலான பங்களிப்பை நீங்கள் செய்ய வேண்டும்.
நான் இன்று வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடமை ஆற்றுகின்றேன். நான் ஏன் தென்பகுதியில் இருந்து இங்கு வரவேண்டும்? இங்கே அந்த பதவிக்கு உங்கள் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம்தானே? எனவே நீங்கள் உங்கள் சொந்த மாகாணத்துக்கு உங்களாலான பங்களிப்பை செய்ய வேண்டும். வடக்கு மாகாணத்தில் உள்ள வறிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு நீங்கள் கட்டாயமாக உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.
ஒரு கோரிக்கையை உங்களிடம் முன்வைக்க விரும்புகிறேன். அதாவது, வடக்கு மாகாணத்தை சேர்ந்த நீங்கள் உயர்பட்டங்களைப் பெற்றாலும் மீண்டும் கடைசி மூன்று வருடங்களாவது வடக்கு மாகாணத்துக்கு சேவையாற்ற வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
ஏனென்றால், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு வடக்கு மாகாணத்தை சேர்ந்த உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். இதேபோல, வடக்கு மாகாணம் என நீங்கள் குறிப்பிட்டுவிட்டு யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளில் கடமையாற்றுவதை ஏற்க முடியாது. ஆனால், தீவு பகுதிகளில், பின்தங்கிய பகுதிகளில் கடமையாற்றுவதன் மூலம் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கல்வி மட்டத்தை உயர்த்துவதற்கு உங்களாலான பங்களிப்பை செய்ய முடியும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)