
posted 31st October 2022
வெறுமனே வேதாகமத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு செல்வது மறைபரப்பு அல்ல. மாறாக இன்று உக்கிரேன் நாட்டில் பணிபுரிந்து வரும் குருக்கள் அங்கிருந்து வெளியேறாது மக்களுக்கு வாழ்ந்து காட்டும் பணி செய்கின்றனரே இதுதான் மறைபரப்பு ஆகும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
அகில திருச்சபை மறைபரப்பு ஞாயிறு தினத்தை கொண்டாடியபோது மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை பங்கில் ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) விஷேட மறைபரப்பு தினமாக மன்னார் மறைமாவட்ட திருஅவை நினைவு கூர்ந்தது.
இன்றைய தினம் இலங்கையின் பாப்புரையின் உதவி இயக்குனரும் திருமலை மறைமாவட்ட பாப்புரையின் சபை இயக்குனருமான அருட்பணி சேவியர் ரஜீவன் அடிகளார் மன்னார் மறைமாவட்ட பாப்புரையின் சபை இயக்குனர் அருட்பணி தயாளன் கூஞ்ஞ அடிகளார் , பேசாலை பங்கு தந்தை மற்றும் உதவி பங்கு தந்தை அருட்பணியாளர்கள் அ.ஞானப்பிரகாசம் மற்றும் டிக்சன் அடிகளார் ஆகியோர் இணைந்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் தலைமையில் கூட்டுத் திருப்லி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன்
-மறைபரப்பு கண்காட்சியும் மற்றும் மறைபரப்பக்கான நிதிக்காக சந்தையும் இடம்பெற்றது
இவ் நிகழ்வின்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் தொடர்ந்து தனது உரையில்
உங்களுக்கு முதற்கண் மறைபரப்பு வாழ்த்துக்களை கூறி நிற்கின்றேன். மறைபரப்பு என்பது இறை இயேசு விண்ணகம் செல்வதற்கு முன்பு கொடுக்கப்பட்ட பணியை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு திருச்சபையானது செய்து கொண்டிருக்கும் பணியாகும்.
எந்த மதம் இனம் நாடு என்றல்ல உலகெங்கும் சென்று கடைகோடி வரை நற்செய்தியை பரப்புங்கள் என்பதாகும். கடந்த சில காலமாக ரசியாவுக்கும் உக்கிரனுக்கும் இடையே கடுமையான போர் இடம்பெற்று வருகின்றது.
கடந்த மாதம் நான் சுவிஸ்சலாந்து , பிரான்ஸ் , போர்த்துக்கள் , ஜேர்மணி ஆகிய நான்கு நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன்.
அங்கு ரயில்வே மற்றும் விமான நிலையங்களை நோக்கியபோது அதிகமான மக்கள் குழுமியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அப்பொழுது எனக்கு தெரிய வந்தது இவர்கள் போரின் காரணமாக உக்கிரேன் நாட்டிலிருந்து அகதிகளாக குவிந்து வருகின்றார்கள் என்று.
இவர்கள் செல்லும் நாடுகள் இவர்களுக்கான உதவி திட்டங்களை முன்னெடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
ஐரோப்பிய நாடுகள் இடம்பெயர்ந்து வரும் இவ் மக்களுக்கு கல்வி தொடக்கம் இவர்களுக்கான இல்லிடம் வேலை வாய்ப்பக்கள் வாழ்வாதாரம் போன்ற உதவிகளை செய்வதில் முனைப்பு காட்டப்பட்டு வருகின்றன.
இவ் இடம்பெயர்ந்து வரும் உக்கிரேன் மக்கள் வெறும் ஆயிரம் லட்சம் அல்ல மாறாக பல மில்லியன் மக்களாக இருக்கின்றனர்.
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற குருக்களின் 'வட்சப்' குறூப்பில் நானும் இணைந்துள்ளேன்.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் எனக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி உக்கிரேன் பகுதியிலிருந்து பல மில்லியன் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பியோடிக் கொண்டு இருப்பதாகவும்
இவ் மக்களை எப்படி காப்பாற்றுவது என பல நாடுகள் திண்டாடிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரேன் நாட்டில் ஆறாயிரம் அருட்பணியாளர்கள் அங்கு பணி புரிந்து கொண்டு இருக்கின்றார்கள். அங்கிருந்து மக்கள் பாதுகாப்பு கருதி தப்பியோடி வருகின்றபோதும் ஒரு குருவும் அங்கிருந்து வெளியேறாது அங்கிருக்கும் மக்களுக்கு உதவிகள் செய்தவண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள ஆயர் இல்லத்தில் ஷெல் ஒன்று விழுந்தபோதும் ஆயருடன் பல குருக்கள் அங்கிருந்து அங்குள்ள மக்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர்.
அத்துடன் குரு மடங்கள் ஆலயங்கள் யாவும் அகதி முகாம்களாக மாற்றி மக்களை தங்கவைத்து பராமரித்து வரும் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அங்கு உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகின்றபோதும் துணை ஆயர் ஒருவர் நியமிக்கப்பட்டு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் ஒழுங்கு முறைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
ஆகவே அங்கு யுத்த முனையிலிருந்து பணி புரியும் ஆயர்கள் மற்றும் குருக்களுக்காக விஷேடமாக மன்றாடுங்கள் என எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று உலக முழுவதும் எமது தாய் திருச்சபை மறைபரப்பு ஞாயிறு தினத்தை கொண்டாடும்போது இன்று நாம் மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலையில் விஷேடமாக கொண்டாடுகின்றோம்.
இன்றைய மையப்பொருள் 'நீங்கள் சாட்சிகளாக இருங்கள்' உக்கிரேனில் பணி புரியும் ஆயர் குருக்கள் இன்று சாட்சிகளாக திகழ்கின்றார்கள்.
வெறுமனே வேதாகமத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு செல்வது மறைபரப்பு அல்ல. மாறாக இன்று உக்கிரேன் நாட்டில் பணிபுரிந்து வரும் குருக்கள் அங்கிருந்து வெளியேறாது மக்களுக்கு வாழ்ந்து காட்டும் பணி செய்கின்றனரே இதுதான் மறைபரப்பு ஆகும்.
எமது நாட்டில் எமது மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை குருக்கள் ஆகியோர் மக்கள் பல வருடங்கள் இவ்வாறான யுத்த சூழ்நிலையில் இரத்தம் சிந்தலின்போது பணி செய்தவர்கள். தங்கள் உயிர்களையும் பணயம் வைத்தவர்கள்.
ஆகவே இவ்வாறான பணி வார்த்தைகளால் அல்ல எமது வாழ்க்கையினால் தொடர வேண்டும். மன்னார் மறைமாவட்டத்தில் பெயருடைய பங்குகளில் பேசாலை பங்கும் ஒரு முக்கியமானது.
இன்றைய இவ் தின வழிபாடு இறைவனுக்கு உகந்த ஒரு வழிபாடாக அமைந்திருந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)