
posted 11th October 2022
உண்மையில் ஒரு கிராமம் முன்னேற வேண்டுமானால் அந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் துடிப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மட்டும் போதாது, ஒற்றுமமையுடன் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் பெரும்பான்மை துறையாக காணப்படுகின்றது. இந்தநிலையில் உழவர்களை நினைவு கூறும் முகமாக மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தில் உழவர் சிலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிதிகளை வரவேற்று மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உழவர் சிலை அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய நடனங்களும் அரங்கேற்றப்பட்டது.
உழவர் சிலையினை நிர்மாணம் செய்வதற்கு நன்கொடை வழங்கிய அனைவரையும் கௌரவப்படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு எருவில் பகுதியில் உள்ள நூலகத்திற்கு தேவையான நூல்களும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், கிராம இளைஞர்கள் மற்றும் அறநெறி பாடசாலையினால் வழங்கி வைக்கப்பட்டது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு;
அந்த வகையில் இக்கிராமத்தில் விளையாட்டுக் கழகம், கலைக்கழகம், இளைஞர் கழகம் ஆகிய மூன்றும் இணைந்து பல நிகழ்வுகளைச் செய்து வருவதை நானறிவேன். இங்கு நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளாக இருந்தாலும், கலை நிகழ்வுகளாக இருந்தாலும் ஒற்றுமையுடன் செயற்படுவது தேசத்துக்கு முன்னுதாரணமாக உள்ளது.
உலகில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும், அதில் உழவர்களுக்காக நடைபெறும் போராட்டம் மேன்மையானது. ஏனென்றால் அவர்கள் இல்லாவிட்டால், இந்த நாடே இயங்காது யோய்விடும்.
அந்த வகையில் எமது மாவட்டம் கூட, இலங்கையில் விவசாய மாவட்டமாக திகழ்வது கண்கூடு. இம்மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகவும், 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ள மாவட்டமாகவும் விளங்குகிறது. அந்த வகையில் உழவர்களை நாம் போற்ற வேண்டும்.
இந்நிலையில் எமது நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் அதிகரித்து முன்றாவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. இன்றைய இந்தப் பொருளாதார நிலைக்கு மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்கள் தான் முழு முதற்காரணம் எனக் கூறப்பட்டாலும், சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி பீடம் ஏறிய அனைத்து ஆட்சியாளர்களுமே காரணமாவர். இவர்கள் 1956 ஆம் ஆண்டு சிஙகளம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்து, எம்மை அடக்கி ஒடுக்கியதனால் அஹிம்சை வழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைந்தது.
அந்த ஆயுதப் போராட்டத்தை அடக்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம் என்ற அறைகூவலுடன், எமது உரிமைப் போராட்டத்தை அடக்குவதற்காக கூடுதலான நிதியை வாரி இறைத்ததுதான் இன்றைய பொருளாதார நிலைக்கான அடித்தளமாகும்.
இந்த இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பெரும்பான்மை இன கட்சிகளும், பெரும்பான்மை இன சக்திகளும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அதற்குப் பின் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆட்சியில்தான் எந்தவித வருமானத்தையும் தராத திட்டங்களுக்குப் பெருமளவில் கடன் பெறப்பட்டுள்ளது. இக்கருத்தை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து தெரிவித்திருந்தார்.
கடந்த 1980க்கு முன்னர் பெறப்பட்ட கடன்கள் குறிப்பாக மகாவலி அபிவிருத்தி திட்ட உருவாக்கத்திற்காகப் பெறப்பட்ட கடனால் வடக்கு - கிழக்கிற்கு அநீதி இழைக்கப்பட்டாலும், தெற்கில் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், மின் உற்பத்தியில் 60 சத வீதமானதை நீர்மின்சாரம் மூலமும் பெற வழிசமைத்தது.
ஆனால் மஹிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் தேவையற்ற விதத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், தாமரைக் கோபுரம் போன்ற எந்தவித வருமானமும் அற்ற திட்டங்களுக்காக பெருமளவு கடன்கள் பெறப்பட்டன.
அதற்கும் மேலாக 2019ஆம் ஆண்டுக்குப் பின்பு கோட்டபாய ராஜபக்சே இந்த நாட்டின் 69 இலட்சம் சிங்கள பௌத்த மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். தான் சிங்கள பௌத்த மக்களால் மட்டுமே தெரிவு செய்யப்பட்டதாக தனது பதவியேற்பின்போது குறிப்பிட்டிருந்தார். ஆனால், இரண்டு வருடங்களின் பின்னர் அதே மக்கள் அவரைத் துரத்தியடித்தார்கள். அவர் எந்தவொரு நாட்டிலும் வசிக்க முடியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இங்கு வந்து அரசியல் அநாதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் விவசாய அசேதன உரத்தை உடனடியாக தடை செய்ததன் காரணத்தினால் தான் விவசாயிகள் இந்த கஷ்ட நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்த உரங்கள் உரிய வேளைக்கு கிடைக்காமையால் எமது விவசாயிகள் துன்பத்தில் வாழ்கின்றனர்.
எமது மாவட்டத்திற்குரிய தேவைகளை இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் நிறைவேற்ற பேதங்களை மறந்து பணியாற்ற வேண்டுமென்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)