
posted 10th October 2022
உணவும், வீடும், அமைதியும் இருந்து விட்டால் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை தீர்ந்து விடும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் வாதிகள் தலையிடக்கூடாது என தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் சட்டத்தரணி சிறிதரன்.
யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி இந்தியாவிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த கருத்தும் கிடையாது. மக்கள் நீதி மய்யம் வளர்ந்து வரும் கட்சி. அரசியல் தீர்வென்பது மக்கள் எதை ஏற்றுக்கொள்கிறார்களோ அதுவே அரசியல் தீர்வு.
அமைதி, உணவு, உடை, தங்குமிடத்தில் நிம்மதி இவைதான் அரசியல். இவை கிடைத்து விட்டால் அரசியலை தூக்கிக் குப்பையில் போட்டு விடுவார்கள் மக்கள்.
வெளிநாட்டிலுள்ள எல்லா தமிழர்களும் இதைத்தான் செய்கிறார்கள். அவர்கள் இந்த பிரச்னையில் தலையிட மாட்டார்கள். எல்லா இடமும் பிரச்னையுள்ளது. தமிழகத்திலும் பிரச்சனையுள்ளது. பிரச்சனையில்லாத இடமில்லை. அதனால், சட்டத்துக்கு உட்பட்டு பேசி பிரச்னையை தீர்க்க முடியாது.
இலங்கையின் உள்விவகாரங்களில் தமிழகத்திலுள்ள சில அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரம் செய்கிறார்கள். அவர்களை மக்கள் நீதி மய்யம் எதிர்க்கிறது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)