
posted 30th October 2022
சாய்ந்தமருதில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை அம்பாறைக்கு இடம்மாற்றம் செய்ய எடுக்கும் முயற்சிகளை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது விடயமாக ஐக்கிய காங்கிரஸின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக செயற்பட்டுவரும் நிலையில் இப்பிராந்தியத்தில் இனங்களிடையே பிரிவினையையும், இளைஞர்களிடையே ஒற்றுமையையும் சிதைக்கும் வகையில் அம்பாறையிலுள்ள ஒரு சில உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக சாய்ந்தமருதிலுள்ள இவ் அலுவலகத்தை மீண்டும் அம்பாறைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக அறிய முடிகிறது.
இதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள சில உயரதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெறப்படுகிறது. இம்முயற்சி மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட அம்பாறையிலுள்ள சில உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் தூண்டுதலின் பேரிலேயே இடம்பெறுதாகவும் அறிய முடிகிறது.
கடந்த காலங்களிலும் கல்முனையில் இருந்த சில காரியாலயங்கள் அம்பாறைக்கு மாற்றப்பட்டன.
இவ்வாறு இவை மாற்றப்படுவதற்கான பிரதான காரணம் கல்முனைத்தொகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் பாராளுமன்றத்தில் உள்ள அவர்களின் கட்சிகளின் வங்குறோத்து தனமுமாகும்.
அரசியல் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாத முஸ்லிம் கட்சிகளுக்கு முஸ்லிம்கள் தொடர்ந்தும் வாக்களித்து ஏமாந்து விட்டு தொடர்ந்தும் இது போன்ற முயற்சிகளால் சமூகம் பின்னடைவை சந்திக்கின்றது.
ஆகவே மேற்பட்ட அலுவலகத்தை அம்பாறைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை பிரதிநிதிதுவப்படுத்தும் முஸ்லிம் எம்பீக்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)