
posted 21st October 2022
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடல் மீன்பிடி அமோகமாக இடம்பெற்றுவருகின்றது.
குறிப்பாக கரைவலை மீன்பிடியாளர்களுக்கு தினமும் பெருமளவில் மீன்கள் பிடிபட்டுவருவதனால் இந்த மாவட்டத்தில் மீன்களின் விலைகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் இரவு பகலாக மீன்விற்பனை இடம்பெற்று வருகின்றது.
கரைவலை மீன்பிடியாளர்கள் இந்த அமோக மீன்பிடியை அடுத்து காலையில் மட்டுமன்றி பிற்பகலிலும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் கூடுதலாக கீரி, பாரைக்குட்டி, சாளை போன்ற இன மீன்கள் பெருமளவில் பிடிபட்டும் வருகின்றது.
குறிப்பாக இந்த மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான நிந்தவூர் காரைதீவு மாளிகைக்காடு சாய்ந்தமருது கல்முனை போன்ற பிரதேசங்கள் உட்பட பல பிரதேசங்களில் கடல் மீன்படி அதிகரித்துள்ளது.
இந்த அமோக மீன்படி காரணமாக ஒரு கிலோ ரூபா 1500 வரை விற்பனையான குறித்த மீன்கள் ஒரு கிலோ ரூபா 500 முதல் ரூபா 600 வரை மலிவு விலையில் விற்பனையாகிவருகின்றது.
இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு மத்தியில் கடல் மீன்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமை நுகர்வோரான பொது மக்களுக்கு பெரும் ஆறுதலையளித்துள்ளது.
இதேவேளை தினமும் கடல் மீன்பிடி இடம்பெறுவதனால் தொழிலின்றி முடங்கிக் கிடந்த தொழிலாளர்கள் கடற்தொழிலை நாடியவன்னமுள்ளனர்.
இதேவேளை மாலை வேளைகளிலும் மீன்பிடிபடுவதனால் உள்ளுர் வீதிகளிலும் பிரதான வீதிகளிலும் இரவிலும் மீன் விற்பனை இடம்பெறுவதனை அவதானிக்க முடிகின்றது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)