“கல்முனை உவெஸ்லியின் பங்களிப்புகள் அளப்பரியன”

“139 வருடகால வரலாற்றுப் பெருமை மிக்க கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை இன, மத பேதங்களுக்கப்பால் அளப்பரிய கல்விச் சேவையைத் தொடர்ந்து வருகின்றது. கல்முனை மாநகர பிரதேசம் சமாதான பிரதேசமாக கட்டியெழுப்பப்படுவதற்கும் அடித்தளமாக இந்தப்பாடசாலை திகழ்கின்றது”

இவ்வாறு, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் புகழாரம் சூட்டினார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை (தேசியப் பாடசாலை) முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற மீலாதுன் நபி விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கணடவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் எஸ். கலையரசன் தலைமையில், பாடசாலை நல்ல தம்பி மண்டபத்தில் தமிழ், முஸ்லிம் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றுதலுடன் விழா சிறப்புற நடைபெற்றது.

விழாவின் ஆரம்பத்தில் மும்மத போதகர்களின் ஆசிர்வாத உரைகள் இடம்பெற்றதுடன், பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல். அப்துல் றகீம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.

வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“பெரும்பான்மை தமிழ் மாணவர்களைக் கொண்ட இந்த பாடசாலையில் இன,மத நல்லிணக்கத்தை மேலோங்கச் செய்யும் வகையில் மிகச் சிறப்புடன் மீலாதுன் நபிவிழா இடம்பெறுவது பெரும் பாராட்டுக்குரியதும், எடுத்துக்காட்டானதுமாகும்.

கல்முனைப் பிராந்தியத்தில் 139 வருடகால வரலாற்றுப் பெருமை மிக்க கல்விச் சேவையாற்றிவரும் இப்பாடசாலை இனமத பேதங்களுக்கப்பால் பெரும் பணியைத் தொடர்ந்து வருகின்றது.

இதனால் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் உயர் நிலையிலுள்ள பல ஆளுமைகளை உருவாக்கிய வலாற்றுப் பெருமையை இப்பாடசாலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக சில சந்தரப்பங்களில் இப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களிடையே கசப்பான சம்பவங்கள் தோற்றுவிக்கப்பட்ட போதிலும், இப்பிரதேசத்தை சமாதான பிரதேசமாகக் கட்டியெழுப்பும் நல் முயற்சியின் அடித்தளமாகவும் இப்பாசடாலையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த மீலாதுன் நபி விழாவும் இப்பாடசாலையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் இத்தகைய ஏனைய மத நிகழ்வுகளை மதித்து, சிரத்தையோடு கௌரவமளிக்கும் மனப்பாங்கு தோற்றுவிக்கப்படுவது முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.

இந்த வகையில் உவெஸ்லி, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் பாடசாலை சமூகத்தினரும் பாராட்டுக்குரியவர்களாவர்.

மேலும், இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இஸ்லாத்தைப்பற்றியும், முஸ்லிம்களின் மத விழுமியங்கள், சம்பிரதாயங்களை ஏனையவர்கள் புரிந்து கொள்ளாமையே இதற்குக் காரணமாகும்.

ஆட்சியாளர்களின் பிழையான புரிதல் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது தலைதூக்க முடியாத நெருக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட துயரையும் எளிதில் மறந்து விடமுடியாது” என்றார்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

“கல்முனை உவெஸ்லியின் பங்களிப்புகள் அளப்பரியன”

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)