
posted 2nd October 2022
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கோருமாறு அரச சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழு அனுமதி வழங்கி ஒரு வருடமாகியும் கல்வி அமைச்சு இன்னும் விண்ணப்பம் கோராமல் காலம் கடத்தி வருவதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்து, தமது சங்கம் கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக அதன் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஒரு பதவிக்கான வெற்றிடம் ஏற்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அப்பதவி தொடர்பாக விண்ணப்பம் கோரப்படுவது அரச சேவை ஆணைக்குழுவின் நிருவாக நடவடிக்கை விதிமுறையாகும். ஆனால், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் பதவி வெற்றிடம் ஏற்பட்டு சுமார் ஒன்றரை வருட காலம் கடந்துள்ள போதிலும் அப்பதவியை முறைப்படி நிரப்புவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் கல்வியமைச்சு எடுக்கவில்லை.
தற்போதைய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட கடமை நிறைவேற்றல் கடிதத்தின் (Cover up duties) அடிப்படையில் சுமார் 15 மாதங்களாகக் கடமை செய்து வருகிறார். இவ்வருடம் டிசம்பர் மாதத்துடன் அவர் ஓய்வுபெறவுள்ள நிலையில், அப்பதவியை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வியமைச்சு இதுவரை கோராதுள்ளது.
இலங்கை கல்வி நிருவாக சேவை பிரமாண குறிப்பின் அடிப்படையில் மாகாண கல்வி பணிப்பாளர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்குரியதாகும். மாகாண கல்விச் செயலாளருக்கோ, மாகாண ஆளுனருக்கோ இது தொடர்பாக எவ்வித அதிகாரமும் இல்லை. எனினும், இதனை மீறிய வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. அவசரத் தேவையின் நிமித்தம் ஒரு சிரேஷ்ட இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி நியமனம் செய்யப்பட்டார் என்ற வகையில் இதனை ஏற்றுக் கொண்டாலும் இது ஒரு பிழையான முன்மாதிரியாகும்.
தகவலறியும் சட்டத்திற்கு அமைய மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சிடம் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் தகவல் கோரியபோது, விரைவில் விண்ணப்பம் கோரப்படும் எனவும், இதற்குரிய அனுமதியை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக்குழு வழங்கியுள்ளதாகவும் எமது சங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் விண்ணப்பம் கோரப்படவில்லை.
மாகாண கல்வி பணிப்பாளர் பதவி என்பது அகில இலங்கை மட்டத்திலான பதவியாகும். கிழக்கு மாகாண அதிகாரிகளைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்ற எவ்வித தேவையும் இல்லை. எனவே, தகுதியான அதிகாரிகள் திறந்த விண்ணப்பம் கோரப்படுவது மூலம் நிரப்பப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழு என்பவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY