வழி தவறிச் செல்லும் இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள் - எம் சுமித்

இன்றைய சூழலில் திசைமாறிச் செல்லும் பறவைகள் போன்று வழி தவறிச் செல்லும் இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக பேசாலை புத்தி ஜீவிகள் முன்வர வேண்டும் என பேசாலை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத் தலைவர் எம் சுமித் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நாட்டில் பல இடங்களில் இளைஞர்களுக்கு நல்வழி காட்டப்படாமையால் பிரச்சனைகள் தலைதூக்கி வருவதை கவனத்தில் எடுத்துக்கொண்ட பேசாலை கத்தோலிக்க ஒன்றிய இளைஞர் மன்றமானது பேசாலை பகுதியிலுள்ள புத்தி ஜீவிகளை ஒன்று கூட்டி அவர்களிம் தங்கள் எண்ணங்களை முன்வைத்த நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (16) புனித வெற்றிநாயகி ஆலய முன்றலில் பேசாலை கத்தோலிக்க ஒன்றிய இளைஞர் மன்றத்தின் தலைவர் எம் சுமித் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பேசாலை பகுதியிலுள்ள பல தரப்பட்ட புத்தி ஜீவிகள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பேசாலை கத்தோலிக்க ஒன்றிய இளைஞர் மன்றத்தின் தலைவர் எம் சுமித் தொடர்ந்து தனத உரையில் தெரிவித்ததாவது;

பேசாலை இளைஞர்களின் நலன் கருதி இவர்களின் வாழ்வும், சேவையும், அர்ப்பணிப்பும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பேசாலை பகுதியிலுள்ள பல தரப்பட்ட திணைக்களங்களிலும், அமைப்புக்களிலும் மற்றும் ஓய்வுநிலை அரச, அரச சார்பற்றவர்கள் கொண்ட புத்திஜீவிகள் யாவரும் பேசாலை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று ஒன்று கூடியுள்ள யாவருக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டவர்கள்.

இளையோர்களாகிய நாங்கள் பலவற்றை செய்ய, சாதிக்க இந்த இளம் வயதில் துடித்து நிற்கின்றோம்.

ஆனால் பல தருனங்களில் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாது திசைமாறிய பறவைகளாக அலைந்து திரிகின்றோம்.

இளைஞர்களின் வயதானது ஒரு துடிப்பு நிறைந்த வயதாகும் என்பது யாவரும் அறிவர்.

நல்ல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துச் செல்லும்போது பல தடவைகள் சோர்ந்து போகின்றோம்.

ஆகவே, எம்மை வழி நடத்த எம்மை செம்மைப்படுத்த எமக்கு தெரியாத தன்மையும் எம்மிடம் காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே எங்களை வழிநடத்த, பக்குவப்படுத்த, நெறிப்படுத்த நாங்கள் மூத்தவர் பெரியோர் மற்றும் புத்தி ஜீவிகளை இந்தவேளையில் இந்த இடத்தில் ஒன்றுகூட்டி நிற்கின்றோம்.

எமது பேசாலை பங்கில் ஆன்மீக, சமூக பொருளாதார அபிவிருத்தியை மனதில் இருத்தி எமது அன்றாட வாழ்வுப் பயணம் பேசாலை மண்ணில் வளர்ந்து வர இளையோராகிய நாங்கள் விரும்பி நிற்பதுடன் உங்கள் உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

வழி தெரியாது தவிக்கும் எங்களை ஒரு நல்லதொரு இலட்சியப் பாதையில் நடைபோட உங்களின் ஆலோசனை உதவிகளை இந்த நேரத்தில் வேண்டி நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

வழி தவறிச் செல்லும் இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள் - எம் சுமித்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)