
posted 14th October 2022
மன்னார் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் நஞ்சற்ற நெற் செய்கை மேற்கொள்வதற்கு மெசிடோ நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் முதற்கட்டமாக காலபோகத்துக்கான விதை நெல் வழங்கும் நிகழ்வு மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
வெள்ளிக் கிழமை (14.10.2022) காலை மடு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கீ.பீட். நிஜாகரன் அவர்கள் கலந்து கொண்ட பங்களிப்புடன் மன்னார் 'மெசிடோ' நிறுவனத்தின் பணிப்பாளர் யட்சன் பிகிராடோ தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
'மெசிடோ' நிறுவனம் முன்னெடுக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக வட மாகாணத்தில் விவசாயிகள் நஞ்சற்ற நெற்செய்கையை மேற்கொள்ளும் முகமாக 2021 – 2022 ஆம் ஆண்டு காலபோக விவசாய நெற் செய்கைக்கு நூறு விவசாயிக்கு சுத்திகரிக்கப்பட்ட தலா அறுபது கிலோ விதை நெல் வழங்கப்பட்டிருந்தது.
இதிலிருந்து உற்பத்தியான விதை நெல்லிருந்து பயண்பெற்ற விவசாயிகள் தலா ஒரு மூடை வீதம் மீண்டும் மெசிடோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் விதைநெல் மன்னார் களஞ்சியத்தில் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 2022 – 2023 காலபோக விவசாய நெற் செய்கைக்கு வழங்கப்படுவதற்கான முதற் கட்ட நிகழ்வே தற்பொழுது இடம்பெற்றுள்ளது.
இந் நடப்பு வருட (2022 – 2023) காலபோக நெற்செய்கைக்கான விதை நெல் மன்னார் மாவட்டத்தில் விஸ்தரிக்கப்பட்ட நிலையில் 124 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பிரதேச செயலகம் மற்றும் விவசாய திணைக்களம் ஆகியன இனம் காணப்பட்ட விவசாயிகளுக்கே வழங்கப்படவதாகவும், இதில் முதல் கட்டமாக மடு பிரதேச செயலகப் பிரிவில் சின்னவலயம்கட்டு , குஞ்சுக்குளம் , பெரியமுறிப்பு ஆகிய 16 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோ கொண்ட சுத்திகரிக்க்பட்ட விதை நெல் மூடை வழங்கப்பட்டுள்ளதாக மெசிடோ நிறுவன பணிப்பாளர் யட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஏனைய பகுதியில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இவ் விதை நெல் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)