
posted 17th October 2022
சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும், இந்தோனேசியா தூதுவர் டெவி குஸ்ரினா ரொபிங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். குறிப்பாக காலநிலை மாற்றங்கள், சூழல் மாசடைதல், சுற்றாடல் பாதிப்புகள் இரண்டு நாடுகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன? அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகள் என்னவென்பது குறித்து இரண்டு நாடுகளின் முக்கியஸ்தர்களும் தீவிர கவனஞ் செலுத்தினர்.
அத்துடன் நவம்பர் மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள COP-27 உச்சி மாநாடு தொடர்பிலும் இச்சந்திப்பின் போது பேசப்பட்டது. அதுமாத்திரமன்றி உச்சி மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இலங்கை - இந்தோனேசிய சுற்றாடல்துறை அமைச்சர்கள் அங்கு சந்தித்து பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் பச்சைவீட்டு வாயுக்கள், இலாபகரமான சூழல் ஒத்திசைவு மரம் நடுகைத்திட்டம் தொடர்பிலும் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டதுடன் இரண்டு நாடுகளினதும் பரஸ்பர முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இலங்கையும் இந்தோனோசியாவும் சீதோஷ்ண நிலையில் ஒருமித்த தன்மை கொண்டிருப்பதால் அடிக்கடி இடம்பெறும் வெள்ள அனர்த்தங்கள், கடற்கொந்தளிப்புக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)