
posted 17th October 2022
பொதுமக்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள் அல்லது பிணக்குகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு 1988ம் ஆண்டின் 72ம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ள மத்தியஸ்த சபைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை 234ம் இலக்க மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பினை வாழ்வில் கிடைத்த பெரும் பேறாகக் கருதி பணியாற்ற வேண்டும் என்று அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் ஸாபிர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபைகளுக்கான புதிய மத்தியஸ்தர்களை தெரிவு செய்வதற்கான 'சமரச திறன்கள் மற்றும் உபாய மார்க்கம் தொடர்பான 05 நாள் பயிற்சிநெறி' அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை கூட்ட மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில், பிரதேச செயலாளர், அஹமட் ஸாபிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான பயிற்சி அதிகாரி எம்.ஐ.எம். ஆஸாத், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பயிற்சி அதிகாரி செல்லத்துரை விமலராஜா, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் அன்வர் சாதாத் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் அஹமட் ஸாபிர் மேலும் கூறுகையில்,
அரசியல் கலப்பற்ற மத்தியஸ்த சபைகளின் தோற்றத்திற்குப் பின்னர் பொலிஸ் நிலையம், பிரதேச செயலகங்களுக்குச் செல்லும் பிரச்சினைகள் அல்லது பிணக்குகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளன எனலாம். பொதுமக்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள் அல்லது பிணக்குகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு மத்தியஸ்த சபை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்த சபைகள் நமது நாட்டில் சிறப்பாக இயங்கி வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 20, 30 வருடங்கள் நீடித்த
பிரச்சினைகளை ஒரு மாத காலத்தில் தீர்த்துக் கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது. சிறிய பிரச்சினைகளுக்கு நீதி மன்றங்களை நாடுபவர்களின் தொகையும் கணிசமானளவு குறைவடைந்துள்ளது. அட்டாளைச்சேனை மத்தியஸ்த்த சபைக்கு அனுபவமிக்க துறைசார் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. எதிர்காலத்தில் இச்சபை மேலும் சிறப்பாக தொழிற்பட வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)