பி.எம். செபமாலையின் நல்லடக்கம்

மன்னார் மாவட்டத்தில் தமிழ் பற்றாளரும், எழுத்தாளரும், முன்னாள் மாந்தை கிழக்கு கிராமோதய சபைத் தலைவரும், முன்னாள் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான பி.எம். செபமாலை அவர்களின் நல்லடக்கம் வெள்ளிக்கிழமை (30.09.2022) அவரின் கிராமமான ஆட்காட்டிவெளி அண்ணாரின் இல்லத்திலிருந்து புனித சவேரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலியுடன் வல்லாத்தாப்பிட்டி துயிலும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரின் உடலுக்கான இறுதி மரியாதை செலுத்தும் முகமாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், விநோதநோகராதலிங்கம் , வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன் உட்பட மதத் தலைவர்கள் அரசியல் வாதிகள் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் பலர் தங்கள் அஞ்சலி உரைகளையும் நிகழ்த்தினர்.

அண்ணார் கடந்த புதன்கிழமை (28.09.2022) காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. யின் இரங்கல் செய்தி

மரணத் தருவாயிலும் கிடந்தபோதும் தன்னைப்பற்றி கவலைப்படாது மன்னார் மக்களின் நலனிலேயே அக்கறைக்காட்டி வந்தவர்தான் அமரர் பி.எம். செபமாலை ஐயா என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அமரரின் இறுதி சடங்கின்போது தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டனி கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எம். செபமாலை அவர்களின் இறுதிச் சடங்கு வெள்ளிக் கிழமை (30.09.2022) இடம்பெற்றபோது அஞ்சலிக் கூட்டத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்ந்து தெரிவிக்கையில்;

அமரர் பி.எம்.செபமாலை ஐயா அவர்கள் தான் கொண்ட கொள்கையில் என்றும் மாறாது தடம்பதித்த உன்னதமான ஒரு தலைவர்.

அவர் தனது இனத்துக்காக அரும்பாடுபட்டவர். எப்பொழுது தமிழனத்துக்காக தன்னை அர்ப்பணித்தாரோ அவர் மரணிக்கும் வரை தனது இனத்துக்காகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.

அது மட்டுமல்ல இவர் கலை, பண்பாட்டுக்களிலும், கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும் இவர் பெயர் சொல்லக்கூடியளவுக்கு தன்னை அடையாளப்படுத்தக்கூடிய தன்மையில் அவர் வாழ்ந்துள்ளார்.

இவர் பல விடயங்களில் சிறந்து காணப்பட்டபோதும் மக்கள் மத்தியில் மிகவும் பண்புள்ள மனிதனாக வாழ்ந்திருக்கின்றார்.

நான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பின் இவரை அடிக்கடி இவர் இல்லத்துக்கு வந்து சந்திப்பதும் அவரிடம் ஆலோசனை பெற்றுச் சென்றவன்.

மறைந்த இந்த தலைவர் என்னிடம் கூறுவது மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானது கட்டுக்கரைக்குளம் இவற்றை தொடர்ச்சியாக கண் காணித்துக் கொள்ளுங்கள் என தெரிவிப்பார்.

இவர் மரணிக்கும் தருவாயிலும் தன்னைப்பற்றி சிந்தனைக் கொள்ளாது மன்னார் மக்கள் நலனிலேயே அக்கறையாக இருந்தார் என்பதே இது எடுத்துக்காட்டு.

தற்பொழுது இவரைப் போன்று எங்களில் எத்தனைபேர் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே.

இன்று மன்னார் மாவட்டத்தில் பி.எம். செபமாலை என சொல்பவர்களைவிட சேர்மன் ஐயா என்று சொல்பவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.

இந்த நேரத்தில் நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக அமரருக்கு எங்கள் அக வணக்கத்தையும் இவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் நவிழ்ந்து நிற்கின்றேன் என்றார்.



முன்னைய செய்தி >>>>> மன்னாரில் தமிழ் பற்றாளர் பி.எம். செபமாலை விடை பெற்றார்

பி.எம். செபமாலையின் நல்லடக்கம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)