பலவகைச் செய்தித் துணுக்குகள்

மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் எஸ். சிவரூபனுக்கு கொலை அச்சுறுத்தல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் எஸ். சிவரூபனுக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய காலப் பகுதியில் சுமார் 300 வரையிலான கொலை, பாலியல் வன்புணர்வு , சித்திரவதைகள் உள்ளிட்ட வழக்குகளில் சட்ட வைத்திய அதிகாரியாக முக்கிய சாட்சியமாக உள்ளார்.

குறித்த வழக்குகளில் எதிரியாக உள்ளவர்கள் தெற்கில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குகளின் முக்கிய சாட்சியாக உள்ள சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர். எஸ். சிவரூபனும் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகளுக்காக எதிரிகளை யாழ்ப்பாணம் , கிளிநொச்சி நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது, எதிரியுடன், சாட்சியையும் ஒரே சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, எதிரிகளுடன் சாட்சியான தன்னையும் ஒரு வாகனத்தில் அழைத்து வருவதனால், தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு வைத்தியர் கொண்டு வந்தார்.

இதனை அடுத்து, வழக்குகளின் முக்கியமான சாட்சியான சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதிமன்று அறிவுறுத்தியுள்ளது.

பளை வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகரான சின்னையா சிவரூபன் 2019ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம், வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். இவரது கைதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேர் கைதானர்கள்.

இவருடன் கைதான 7 முன்னாள் போராளிகளும் இரண்டு வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குற்றச்சாட்டுக்கள் ஏதும் சுமத்தப்படாது அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மருத்துவர் சிவரூபனின் விடுதலை திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுவதாக குடும்பத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.



தனுஷ்கோடியில் மூவர் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் தவித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து மரைன் பொலிஸார் படகில் சென்று நேற்றுக் காலை மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY