பலவகைச் செய்தித் துணுக்குகள்

பஸ்ஸிற்கு கல்லெறி

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் மீது கல் வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த கல் வீச்சுத் தாக்குதலில் குறித்த பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்தபோதிலும் அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



“திறன்காண் நிகழ்ச்சி 2022″
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக “திறன்காண் நிகழ்ச்சி 2022″ எனும் கருப்பொருளில் அழகு மற்றும் விருந்தோம்பல் துறைசார்ந்த நிகழ்வு எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில் கல்லூரி வளாகத்திலுள் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதான நோக்கமானது வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்களின் மத்தியில் உள்ள தொழில்நுட்ப திறன்களை இனங்கண்டு, அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்வதாகும் - என்று ஏற்பாட்டுக் குழுவினர் வியாழக்கிழமை (06) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் பன்முகத்திறன்காண் போட்டிகளான, மணப்பெண் அலங்காரம் மற்றும் உயர் நாகரிக அலங்காரப் போட்டிகள், பானங்களில் பல வர்ணங்களை வெளிப்படுத்தும் Mocktail போட்டி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

தவிர, 50இற்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் காட்சியறைகள், அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் - குறிப்பாக கண், காது, உடல் நிறைச்கட்டி, குருதி அமுக்கம் மற்றும் நீரிழிவு பரிசோதனைக்கான இலவச மருத்துவ முகாமும் அமையவுள்ளன.



போதைப் பொருள் வியாபாரத்தில் பெண்

யாழ்ப்பாணம் கொக்குவிலில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட குற்றத்தடுப்பு பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழு குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

பின்னைய செய்தி

கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய தாய் ஒருவரே நேற்று யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கையிட்டனர்.
சந்தேக நபர் நேற்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்க முடியாது என சுட்டிக்காட்டிய மன்று வரும் 21ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது



ஓட்டோ சாரதி மீது வாள்வெட்டு

கொக்குவில் பகுதியில் ஓட்டோ சாரதி மீது வாள்வெட்டுத் குழு தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமைடைந்தார்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது;

அச்சுவேலியைச் சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (07) கொக்குவில் பகுதியில் இருந்து அச்சுவேலியில் உள்ள தனது வீடு நோக்கி ஓட்டோவில் சென்று கொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY