
posted 2nd October 2022
எஸ் தில்லைநாதன்
இணைய விளையாட்டால் உயிரிழந்துள்ள சிறார்கள்
யாழ்ப்பாணம்வடமராட்சி பிரதேசத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு சிறுவர்கள் இணைய விளையாட்டால் (வீடியோ கேம்) தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளனர் என்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது;
வடமராட்சி பிரதேசத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு சிறுவர்கள் இணைய விளையாட்டுக்கு அடிமையான நிலையில் உயிரிழந்துள்ளனர்.
15 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 வயதான சிறுவன் இணைய விளையாட்டில் (ஒன்லைன் கேம்) தனது நண்பர்களுடன் ஈடுபட்டுள்ளான். அந்தச் சிறுவன் தோல்வியடைந்த நிலையில், அவனது நண்பர்கள் குறுஞ்செய்தி வழியாகக் கேலி செய்ததை அடுத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளான்.
14 வயதான சிறுவன் இணைய விளையாட்டில் ஈடுபட்ட போது தாயார் கண்டித்ததை அடுத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளான்.
இவர்கள் இருவரினதும் உயிர்கள் பறிக்கப்படுவதற்கு புறக்காரணிகள் சில இருந்தாலும் வீடியோ கேம் என்பதுதான் பிரதான காரணியாக உள்ளது. ஆதலால், பெற்றோர்கள் தமது சிறுவர்களின் நலனிலும் அவர்களின் செயற்பாடுகளிலும் அதீத அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன்
ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் (01) காலை வவுனியாவில் பல்வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தோணிக்கல், கோயில்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
தோணிக்கல் பகுதியி்லிருந்து 219 மில்லி கிராம் ஹெரோயினும், கோயில்குளம் பகுதியிலிருந்து 129 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
ஹெரோயினை வைத்திருந்த 51, 44 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
உணவுப் பற்றாக் குறையிலும் மாவைப் பதுக்கி மவுசு காட்டிய வியாபாரிகள்
வாஸ் கூஞ்ஞ
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப் போவதாக தெரிவித்து வர்த்தகர்கள் கோதுமை மாவை பதுக்கி வைத்து தட்டுப்பாட்டுக்கு வழி சமைத்துள்ளதாக மத்திய மலைநாட்டுப் பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மத்திய மலைநாட்டுப் பகுதி மக்கள் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;
அண்மை காலமாக கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட போதும் கோதுமை மா சில தினங்களாக பெறக்கூடிய நிலை காணப்பட்டதாகவும், ஆனால், மீண்டும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட இருப்பதாக கேள்விப்பட்டதும் தற்பொழுது இப்பகுதிகளில் கோதுமை மாவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப் பகுதி வர்த்தகர்கள் பதுக்கியுள்ளமையாலேயே இந் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் பகுதி மக்கள் பெரும்பாலும் கோதுமை மாவின் உணவையே உண்டு வருவதாகவும், இம் மா தட்டுப்பாட்டால் இப் பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ் வாழ் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)