
posted 24th October 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2016- 2019 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய அதிகரிப்புக்கு முழுமையான தீர்வு காணப்பட வேண்டுமென ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான
ஏ.எல். முகம்மட் முக்தார், மகஜர் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
அரசாங்க சேவை ஊடாக நாட்டுக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி ஓய்வுபெற்ற அரச ஊழியர்களில், 2016ஆம் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம், தனது முதலாவது அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் பாரிய அநீதியிழைத்தது.
இவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை தற்காலிகமெனும் போர்வையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இப்பிரச்சினை இன்றுவரை தீர்வின்றி தொடர்கிறது. இது பாரிய அடிப்படை உரிமை மீறலாகும். இதன் மூலம் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு, திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்ட 35/2019 ஆம் இலக்க சுற்று நிருபத்தையே கோட்டா காலத்து அமைச்சரவை இடைநிறுத்தியிருந்தது. இதற்கு நீதி வழங்குமாறு கோரி கடந்த மூன்று வருடங்களாக எமது அமைப்பு போராடி வருகிறது.
அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளோம். இவ்வழக்கிற்கான பதில் மனுவை சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த 03 வருடகாலமாக நீதிமன்றத்திற்கு வழங்க முடியாத நிலையில் கால இழுத்தடிப்பை செய்து வருகிறது.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்ற பின்னர் அவரது ஆலோசகர்கள், நிதியமைச்சு செயலாளர் மற்றும் திறைசேரி அதிகாரிகளுடன் எமது சங்கம் பல சுற்றுப் பேச்சுவார்த்தையை நடாத்தியுள்ளது. இதன்போது ஓய்வூதிய அதிகரிப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இறுதியாக நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவையை 04 கட்டங்களாக பெறுவதற்கும் 2023 ஜனவரி முதல் அதிகரிப்பை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அதற்கான சம்மதக் கடிதமும் எம்மால் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
எனவே, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தில் இதற்கான நிதி ஏற்பாடுகளைச் செய்து, எமது நீண்ட கால பிரச்சினைகக்கு தீர்வினை வழங்க உதவுமாறு அம்மகஜரில் ஜனாதிபதியிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளோம் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY