
posted 20th October 2022
தீபாவளியை முன்னிட்டு நீண்ட காலமாக சிறைகளில் வாடிய தமிழ் அரசியல் கைதிகள் 8பேரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானித்திருப்பது உறவுகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையொட்டி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் தனது அறிக்கையில்;
கடந்த 30ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் யுத்தம் மௌனித்து பன்னிரெண்டு வருடங்கள் கடந்தும் நிம்மதியாக வாழ முடியாத ஓர் சூழலில் வாழ்கின்றனர்.
முப்பது ஆண்டு கால யுத்தத்தால் ஏராளம் உறவுகளை பறி கொடுத்தும், பிரிந்தும் வாழ்பவர்கள் தமிழ் உறவுகள். காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியும், சிறைகளில் வாடுபவர்களை எண்ணியும் எமது உறவுகள் அவர்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்து வருகின்றனர்.
மரணத்தின் போது பிள்ளையின் முகம் காணாது எத்தனையோ தாய், தந்தையர்கள் உயிரை விட்டுள்ளனர். இன்னும் பலர் தமது பிள்ளை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் உயிரை கையில் பிடித்து வைத்துள்ளனர்.
இந் நிலையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் அரசியல் கைதிகளான வரதராஜன், ரகுபதி சர்மா, இலங்கேஷ்வரன், நவதீபன், ராகுலன், காந்தன், சுதா மற்றும் ஜெபநேசன் ஆகிய எட்டு பேரை விடுவிக்கவிருப்பது காத்திருக்கும் உறவுகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நல்லாட்சி காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தாங்களும் இணைந்து பல அரசியல் கைதிகளை விடுதலை செய்திருந்தமை அனைவரும் அறிந்த ஒன்றே.
எஞ்சியிருக்கும் அரசியல் கைதிகளையும் சட்டத்தின் ஊடாகவோ அல்லது பொது மன்னிப்பு அடிப்படையிலோ விடுவித்து காத்திருக்கும் உறவுகளின் நம்பிக்கையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக 8 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உறவுகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)