டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பிராந்தியத்தில் டெங்கு நுளம்புகள் பெருகி டெங்கு பரவும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளதாலும், பருவ மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதாலும் குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம். றிபாசின் அறிவுறுத்தலுக்கமைய, பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சமாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் தோறும், மக்களை டெங்கு தொடர்பில் விழிப்பூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன்,
பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு குழுவினர், டெங்கு ஒழிப்பு செயலணியினர் அடங்கலாக களப்பரிசோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றன.

மேலும் பொதுமக்கள் டெங்கு பரவல் தொடர்பில் மிகவிழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும், டெங்கு நுளம்புகள் உருவாகாமல் தடுப்பதற்கு தத்தமது சுற்றுப்பறுச் சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், அதனைத் தொடர்ந்து பேணவும் கண்டிப்பாக ஆவன செய்ய வேண்டுமென பிராந்திய பணிப்பாளர் டாக்டர். றிபாஸ் கோரியுள்ளார்.

பெரும்பாலும் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வெற்றுக் காணிகள், நீர்த்தாங்கிகள், குழாய்க் கிணறுகள், குளிர் சாதனப்பெட்டிகள் போன்றவற்றைத் தூய்மையாகப்பேணி டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க பொது மக்கள் முன்வர வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை டெங்கு ஒழிப்பு தொடர்பான சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் கடைப்பிடிக்கத் தவறி, அக்கறையின்றி செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

களப்பரிசோதனைகளின் போது சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் ஆலோசனைகளையும், கால அவகாசத்தையும் மீறுவோர் சட்ட நடவடிக்கைக்ககு உட்படுத்தப்படுவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)