சமஸ்டி தீர்வுக்கு அழுத்தம் கொடுங்கள் - மணிவண்ணன்

சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு அழுத்தம் கொடுங்கள் என யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நியூசிலாந்து தூதுவரிடம் கோரிக்கை. விடுத்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடிக்கு உதவ புலம் பெயர் தமிழ் உறவுகள் தயார் எனவும், அதற்க்கு நாட்டில் தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர முதல்வரை நியூசிலாந்து நாட்டு தூதர் அவரது அலுவலகத்தில் நேற்று (04) சந்தி்த்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நாட்டில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளது. குறிப்பாக நீண்ட காலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் நான்கு வருடங்களுக்கு பின்னர் இம்முறை தேர்தல் நடைபெறவேண்டும். ஆனால், தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையையும் அரசு முன்னெடுக்கவில்லை.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய அரசு ஒன்று அமைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். ஆகவே, இவ்வாறான தேர்தல்கள் நடைபெறுவதற்கு நியூசிலாந்து அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் தமிழ் மக்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என தூதுவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த யாழ் மாநகர முதல்வர்:

வெறுமனே முகங்கள் மாறுவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும். மஹிந்த போன பின்னர் ரணில் வருவது என்ற செயற்பாடுகளை தமிழ் மக்கள் தமது தீர்வுகான வழியாக நினைக்கவில்லை. இதனால் தமிழ் மக்கள் கொழும்பில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றார்.

இது தவிர சர்வதேச அழுத்தம் மூலம் தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும். பொருளாதார பிரச்சினைக்கு புலம் பெயர் உறவுகள் உதவி செய்வதற்கு தயாராக உள்ளனர். அதற்கு தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை அழுத்தங்கள் மூலம் பெற்றுத் தர வேண்டும்.

அரசால் நிர்மூலமாக்கப்பட்ட கட்டடம் இப்போது பொருளாதார பிரச்சினையால் இடை நடுவே நிற்கிறது. அதனை சீர் செய்வதற்கு உதவி செய்ய வேண்டும்.

இந்திய நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபம் மாநகர சபைக்கு ஒப்படைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். அதே போன்று பலாலி விமான நிலையம் மக்கள் பாவனைக்கு விடப் பட வேண்டுமான உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாநகர முதல்வர் தூதுவருக்கு முன்வைத்தார்.

குறித்த சந்திப்பின் போது உள்ளுராட்டசி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலும், யாழ் மாநகர சபையின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் விரிவாக கேட்டறிந்து கொண்டார்.

முடியுமான அழுத்தங்களை கொடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்வோம் என தூதுவர் இதன் போது உறுதி மொழி வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் யாழ் பொது நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

சமஸ்டி தீர்வுக்கு அழுத்தம் கொடுங்கள் - மணிவண்ணன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)