
posted 30th October 2022
70 வருடங்களுக்கும் மேலான அமெரிக்க - இலங்கை நட்புறவு, பங்காண்மை, மற்றும் இருதரப்பு உறவுகளை கொண்டாடும் வகையில், இரு நாடுகளையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கலாக கோலாகலமாக நடைபெற்ற நிகழ்வொன்றில் காலி வீதியில் அமைந்துள்ள புதிய அமெரிக்க தூதரக கட்டிடமானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவத்துக்கான உதவிச் செயலாளர் ஜோன் பாஸ் ஆகியோரினால் இன்று (30) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
“இலங்கை ஜனாதிபதி, கௌரவ விருந்தினர்கள், மற்றும் சக பணியாளர்கள் முன்னிலையில் எமது புதிய தூதரகத்தை கொண்டாடக் கிடைத்தமை பெரும் கௌரவமாகும்” என்று தூதுவர் சங் தெரிவித்தார். “1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து எமக்கு கொழும்பில் தூதகரம் உள்ளது என்பதுடன், இந்த புதிய வளாகமானது இலங்கையுடனான எமது நீடித்த பங்காண்மையை அடையாளப்படுத்துகிறது. சுற்று சூழலுக்கான மதிப்பையும் மற்றும் இலங்கையின் கட்டிடக் கலை, கலாசாரம் மற்றும் கலை நயமான கருப் பொருள்களின் போற்றுதலையும் வெளிப்படுத்தும் இந்த அதிநவீன ஸ்தானத்தை நிர்மாணிப்பதற்கு அமெரிக்கர்களும், இலங்கையர்களும் ஒன்றுபட்டு பணியாற்றினர். எமது இலங்கை நண்பர்களுக்கு எமது புதிய கதவுகளை திறப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.
உதவிச் செயலாளர் பாஸ் தெரிவிக்கையில், “அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான முக்கிய இராஜதந்திர உறவை இந்த புதிய தூதரக கட்டிடம் எடுத்துக்காட்டுவதுடன், பல இலங்கையர்களுக்கு அமெரிக்கா தொடர்பான முதற் கருத்துப்பதிவொன்றையும் வழங்குகிறது. அமெரிக்க கட்டிடக்கலை, பொறியியல், மற்றும் கட்டிட தரங்களில் சிறந்ததை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையான வடிவமைப்பு, நிர்மாணம், மற்றும் செயல்பாடுகளையும் இது எடுத்துக்காட்டுகிறது” என்றார்.
புதிய தூதரக கட்டிடமானது, கொழும்பின் மத்தியிலுள்ள கடலோரப் பகுதியொன்றில் தற்போதுள்ள விரிவாக்கப்பட்ட தூதரக தளத்தில் அமைந்துள்ளதுடன், இலங்கையில் அமெரிக்க இராஜதந்திரத்துக்கான பாதுகாப்பான, நவீன, நிலையான மற்றும் மீளெழுச்சித் திறன் கொண்ட தளமொன்றையும் வழங்குகிறது. இந்த புதிய தூதரக கட்டிடத்தின் கட்டிடக்கலை மற்றும் நிலத்தோற்றம் என்பன இலங்கையின் சூழலியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பின் வெப்பமண்டல காலநிலையால் பெரிதும் அறியப்படுகின்றன. உள்நாட்டில் பெறப்பட்ட இயற்கை கல் மற்றும் மரப்பொருட்களானது இந்த நிலத்தோற்றத்தின் பசுமையான தன்மைக்கு கவனத்தை ஈர்க்கும் நடுநிலை வண்ணக்கலப்பொன்றில் பிராந்தியத்தின் வளமான மூலப்பொருட்கள் தெரிவை குறிப்பிடுகின்றன. இந்த தூதரக கட்டிடத்தின் உட்புறமானது, உள்நாட்டு கலாசாரம், கலை மற்றும் சுற்றுப்புற பூங்காக்களால் ஈர்க்கப்பட்ட இழைநய அமைப்புகள் மற்றும் வடிவங்களை கூட்டிணைத்துள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான மாதிரியொன்றாக அமைந்துள்ள இந்த புதிய தூதரகக் கட்டிடமானது, பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பயன்பாட்டை பெருக்கும் வகையிலும் அதேநேரம், சக்தி விரய செலவுகளையும் மற்றும் பச்சைவீட்டு விளைவு வாயு வெளிப்பாடுகளையும் குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் மற்றும் அதிக மழையின் விளைவுகளத் தணிப்பதற்காக புதிய தூதரக கட்டிடமானது, பிராந்திய ரீதியில் கிடைக்கக்கூடிய காலநிலை எதிர்ப்பாற்றல் பொருட்களையும், நவீனமான மழைநீர் முகாமைத்துவ முறைமையொன்றையும் மற்றும் விரைவில், இந்த கட்டிடத்தின் வருடாந்த சக்தி பயன்பாட்டில் சுமார் பதினொரு சதவீதத்தை ஈடுசெய்யும் ஒளிமின்னழுத்த கட்டமைப்பொன்றையும் தன்னுள் ஒருங்கிணைக்கிறது. அதிவுயர் தரத்திலான கட்டிட உத்திகள் மற்றும் நடைமுறைகளை அங்கீகரிக்கும் உலகளாவிய பசுமை கட்டிட சான்றளிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றான சக்தி மற்றும் சுற்றுச் சூழல் வடிவமைப்பிலான தலைமைத்துவம் (Leadership in Energy and Environmental Design - LEED®) என்பதில் இந்தத் திட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வெள்ளிச் சான்றிதழை அடைவதற்கான பாதையிலும் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த புதிய தூதரக கட்டிடமானது, தூதரகங்களிலான கலை அலுவலகத்தால் பராமரிக்கப்படும் நிரந்தர கலை சேகரிப்பொன்றையும் கொண்டுள்ளது. அமெரிக்க மற்றும் இலங்கை கலைஞர்களின் ஓவியம், புகைப்படங்கள், நெசவு ஆக்கங்கள், மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலான கலையும் இதில் அடங்குகின்றன. இலங்கைக்கான பறவைகளின் தளம் சார்ந்த படைப்புகள் மற்றும் சமுத்திரங்களிலுள்ள பவளப்பாறைகள் மற்றும் பவள வாழ்வை பிரதி நிதித்துவப்படுத்தும் சுவர் சிற்பமொன்று என்பனவும் சிறப்பம்சங்களில் உள்ளடங்குகின்றன. அமெரிக்க மற்றும் இலங்கை சூழலியல் மற்றும் கலாசார பாரம்பரியத்தின் பன்முகத்தன்மை மற்றும் செழுமை பற்றிய புரிதலொன்றை இந்த படைப்புகள் பிரதிபலிக்கின்றன.
வெளிநாட்டு கட்டிட நடவடிக்கைகளுக்கான பணியகம் இந்த புதிய தூதரக கட்டிடத்தின் நிர்மாணத்தை தலைமைதாங்கி வழிநடத்தியிருந்தது. சியாட்டலில் உள்ள Integrus Architecture இந்த திட்டத்தின் கட்டிட வடிவமைப்புக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்ததுடன், அலபாமா மாநிலத்தின் மொண்ட்கோமெரி மாவட்டத்தின் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமான LLC of Montgomery) Caddell Construction Company உள்நாட்டு பொருளாதாரத்தில் சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை உட்செலுத்தி இந்த வளாகத்தை நிர்மாணித்தது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY