
posted 24th October 2022
நாட்டில் அண்மைக்காலமாக விஷம்போல் எகிறியிருந்தது கோழி இறைச்சியின் விலை தற்சமயம் திடீரென வீழ்ச்சிகண்டுள்ளது.
நாட்டின் பொருளாதார சீர்குலைவு காரணமாக பல்வேறு நுகர்வுப் பொருட்களின் விலைகள் கிடு, கிடுவென உயர்ந்த நிலையில் கோழி இறைச்சியின் விலையும் எதிர்பாராத வகையில் உயர்வடைந்திருந்தது.
கோழிகளுக்கான உணவு மற்றும் மருந்துப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் குருநாகல் போன்ற தூர இடங்களிலிருந்து இறைச்சிக் கோழிகளைக் கொண்டுவருவதற்கான போக்குவரத்து செலவின் அதிகரிப்பு என்பவற்றைக் காரணம் காட்டி இந்த விலை உயர்வு ஏற்பட்டது.
ஒரு கிலோ கோழி இறைச்சி சாதாரணமாக 650 ரூபா விலையில் விற்பனையாகி வந்த போதிலும் மேற்படி நிலமைகளால் அண்மைக்காலம் வரை ஒரு கிலோ 1500 ரூபாவும் அதற்கு மேலும் உயர்வடைந்து விற்பனையாகியது.
இதனாலும், தற்போதய வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாது திண்டாடும் நிலையிலும் கோழி இறைச்சி உண்பதை சாதாரண மக்கள் உட்படப் பலரும் தவிர்த்து வந்தனர்.
இவ்வாறு கோழி இறைச்சி விற்பனையிலேற்பட்ட பெரும் வீழ்ச்சி கோழிப் பண்ணையாளர்களைப் பெரிதும் பாதித்தது.
இந்நிலமையில்தான் விஷம் போல் ஏறியிருந்த கோழி இறைச்சியின் விலை தற்பொழுது திடீரென வீழ்ச்சிகண்டு ஒரு கிலோ 1080 ரூபாவாக விற்பனையாகின்றது.
அதிலும் குறிப்பாக ஐந்து கிலோவுக்கு மேல் கோழி இறைச்சியை வாங்குவோருக்கு மேலும் விலைக்குறைப்புடன் வியாபாரிகள் விற்பனை செய்வதையும் அவதானிக்க முடிகின்றது.
கிராக்கியுடனான எந்த நுகர்வுப் பொருட்களையும் பொது மக்கள் தவிரி;த்துக் கொள்வதாலும், புறக்கணிப்பதாலும், விலைக்குறைப்பை அனுபவிக்கத்தக்க நிலமையே இலங்கையில் உருவாகியுள்ள புதிய நிலமையாகும்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)