
posted 3rd October 2022
சரா ஹல்ரன் (Sarah Hulton), இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர், மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்தார். அச் சந்திப்பின் போது தூதுவரை அவர் எமது தமிழ் பண்பாட்டுக்கு அமைய பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
தூதுவர் - அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் சந்திப்பானது இன்று திங்கள் கிழமை (03.10.2022) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், சரா ஹல்ரன் அரச அதிபரிடம் மன்னார் மாவட்ட நிலைமைகளை கேட்டறிந்தார்.
அரசாங்க அதிபரும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும், தேவையான அபிவிருத்திப் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார். அத்துடன், மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி பற்றியும், கிராமிய மட்டத்தில் அதன் அவசியத்தையும் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் தூதுவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)