
posted 30th October 2021

சபா குகதாஸ் (முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்)
இன நல்லிணக்கமும் நிலையான அமைதியும் இந் நாட்டில் நிலைகொள்ள வேண்டுமானால் ஐனாதிபதி கோட்டாபய ஞானசார தேரர் தலைமையில் அமைத்துள்ள ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடையத்தை முன்னெடுக்கும் செயலணி பல்லினங்கள் வாழும் இந்த இலங்கைத் தீவில் ஏற்புடையதல்ல. இதனை நிறுத்திக் கொள்வதே நலம் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்;
பல இனங்கள் வாழும் ஒரே நாட்டில் பல் வகைமை கொண்ட கலாசார மத பண்பாட்டு விழுமியங்கள் காணப்படுவதால் பெரும்பான்மை இனத்தை மையமாக கொண்ட ஒரே சட்டம் என்ற கோசம் ஏனைய இனங்களின் அடிப்படை உரிமைகளை புறம் தள்ளுவதுடன் அவர்களது அரசியல் அபிலாசைகளை குழி தோண்டிப் புதைப்பதாக அமையும்
இதனால் ஒரே நாட்டிற்குள் தொடர்ந்தும் அமைதியற்ற சூழல் உருவாகும். அத்துடன் சர்வதேச நாடுகளின் மேலாதிக்க அழுத்தங்கள் சர்வதேச நியமங்களை அடிப்படையாக கொண்டு வலுப்பெறும் இதனை சிங்கள தேசம் இனியும் எதிர் கொள்ளத் தயாரா? என்ற கேள்விக்கான விடையை நிதானமாக சிந்திக்க வேண்டும்.
உலக நாடுகளின் ஒழுங்கு முறைகளை ஆராய்ந்தால் பல்வகை இனங்கள் வாழும் நாடுகளில் எல்லாம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் ஒவ்வொரு இனங்களின் தனித்துவங்களையும் பாதுகாக்கும் வகையிலான அரசியமைப்புக்களை உருவாக்கி இனங்களின் சுயமரியாதையை பேணும் வகையில் முன்னோக்கி நகர்கின்றன. இந்த நவீன உலகில் மிகவும் பிற்போக்குத்தனமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மனோநிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் இருப்பது மிக வேதனையாக உள்ளது.
இந்த செயலணியை நிறுத்தி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஒவ்வொரு இனங்களுக்கும் வழங்குவதே ஒரே நாட்டிற்குள் சகல இனங்களும் நல்லிணக்கத்துடன் நிரந்தர சமாதானத்துடன் வாழ முடியும். இதுவே இலங்கைத் தீவின் நிலையான அபிவிருத்திக்கும் நிரந்தரத் தீர்வாகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ