
posted 6th October 2021

முன்னாள் மன்னார் நகர சபை உதவி தவிசாளர் ஜேம்ஸ் யேசுதாசன்
தனகென்றும் ஒன்றும் தேடாது மனித நேயத்தை நோக்கி பயணித்தவரும் தமிழர்களின் தந்தை செல்வாவின் ஒரு தவப் புதல்வனாக திகழ்ந்து வலி கொண்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த நேயம் மறைந்தது என ஒரு பதவி நிலை உத்தியோகத்தராக, ஒரு சமூக சேவையாளனாக, ஒரு எழுத்தாளராக இருந்து மறைந்த அந்தோனி மார்க் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் மன்னார் நகர சபை உதவி தவிசாளர் ஜேம்ஸ் யேசுதாசன் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு சமூக சேவையாளனாகவும் ஊடகவியலாளராகவும் திகழ்ந்த அந்தோனி மார்க் அவர்கள் அன்மையில் கொரோனா தொற்றால் காலமானதைத் தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் நோக்குடன் செவ்வாய் கிழமை (05.10.2021) மன்னார் சர்வோதயத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் அரச அதிபர் உட்பட பல அரச சார்பற்ற மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மன்னார் நகர சபை உதவி தவிசாளர் ஜேம்ஸ் யேசுதாசன் தொடர்ந்து தனது அஞ்சலி உரையில் தெரிவிக்கும்போது;
மனித நேயத்துக்காக ஓங்கி ஒலித்த குரல் இப்பொழுது மௌனித்து விட்டது.
அத்துடன் வலி சுமந்த தமிழ் மக்களின் விடிவுக்காகவும் உரிமைக்காகவும் ஓங்கி ஒலித்த குரல் முடங்கி விட்டது. எமக்கு துர்வஷ்டமான நிலையாக மாறியுள்ளது.
மறைந்த அன்தோனி மார்க் ஐயா ஒரு பதவி நிலை உத்தியோகத்தராக, ஒரு சமூக சேவையாளனாக, ஒரு எழுத்தாளராக இவற்றுக்கு மேலாக மனித நேயம் கொண்ட ஒரு மனிதனான வலம் வந்தவர் இவர்.
இவரை நாங்கள் அடங்காத் தமிழன் என்றே அழைப்போம். எத்தனை சவால்கள் இவருக்கு வந்தபோதும் இவரின் இறுதி மூச்சுவரை தான் சார்ந்திருந்த சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் இவர்.
இவர் தமிழரின் தந்தையாம் செல்வாவின் ஒரு தவப்புதல்வனாகவே காணப்பட்டவர். எங்குதான் இருந்தாலும் தந்தை செல்வாவின் நினைவு நாளிலே மக்களை கூட்டி அத் தினத்தை நினைவுகூற தவறமாட்டார்.
இவர் இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு காணிகள் வழங்கும் ஒரு அதிகாரியாக இருந்தபோதும் அவருக்கென ஒரு சொந்தமான காணியோ அல்லது இடமோ இருக்கவில்லை.
இதையிட்டு அவர் ஆதங்கம் கொள்ளும் ஒரு மனிதனாகவும் இருக்கவில்லை. ஆனால் அவரின் நோக்கங்கள், சிந்தனைகள் யாவும் மனித நேயத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தது.
அதிலும் வலி சுமந்த மக்களுக்காக எப்பொழுதும் குரல் கொடுக்கும் ஒரு ஆன்மாகவே அவர் காணப்பட்டார். அவரின் இறுதி மூச்சுவரை அவர் இவற்றை செய்தார் செய்த முடித்துள்ளார். கவிஞரின் பாடல் ஒன்று வாழ்ந்தவர் கோடி வீழ்ந்தவர் கோடி ஆனால் மனிதரின் மனிதில் நிற்பவர் யார்?
ஆனால் இவர் இன்று இங்கு ஒவ்வொருவரினதும் மனதில் நிலை கொண்டுள்ளார் என்றே கூற வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ