
posted 27th October 2021

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 14 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.
சங்கத் தலைவர் ஏ.எம்.அமீர் தலைமையில் மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில், கொவிட் சுகாதார வழிமுறைகளுக்கமைய இக்கூட்டம் நடைபெறும்.
இந்த 14 ஆவது வடாந்தப் பொதுக் கூட்டத்தில், கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் ஜெயானந்தி திருச்செல்வம் பிரம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், இக்கூட்டம் சுகாதார வழிமுறைகளுக்கமைய முப்பது பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இடம்பெறவுள்ளதாகவும் சங்கப் பொதுச் செயலாளரும், நிந்தவூர் பிரதம தபாலதிபருமான யூ.எல்.எம்.பைஸர் தெரிவித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அம்சமாக சங்கத்தின் வெளியீடான “யூ.பி.டி.ஓ.நியூஸ்” வெளியீடும், அம்பாறை – அக்கறைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.ஹேமந்தவின் சேவைகளைப்பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மேலும் சங்கத்தின் நடப்பு வருட புதிய உத்தியோகத்தர் தெரிவும் கூட்டத்தில் இடம்பெறவுள்ள அதேவேளை 14 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
குறிப்பாக தற்பொழுது வாழ்க்கைச் செலவு விசம் போல் ஏறியுள்ளதால் சகல அரச ஊழியர்களுக்கும் 12 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு அரசைக்கோரும் முக்கிய தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்