
posted 8th October 2021
வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் கடற்தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 5ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகை நேராக மோதிச் சேதப்படுத்தியதோடு படகிலிருந்த குருநகர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய மீனவர்கள் முற்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
“எமது கடல் வளங்களை அழிக்காதே”
“இலங்கை அரசே இந்திய இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்து”
“எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வெளிநாட்டு மீனவர்களை அனுமதிக்காதே”
“இலங்கை அரசே உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்து”
“கடல் வளத்தைச் சுரண்டி எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே”
உள்ளிட்ட கோசங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரினால் எழுப்பப்பட்டுள்ளன.
போராட்டத்துக்குப் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை
திணைக்களத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் மனு கையளிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதர் ஆகியோருக்கும் மனுக் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்