
posted 8th October 2021
வடக்கு மாகாணத்தில் இலங்கை தென் பகுதி மீனவர்களாலும் மற்றும் இந்திய இலுவைப் படகுகளாலும் இப் பகுதி மீனவர்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி தங்கள் பொருளாதாரத்தை இழந்து வருகின்றார்கள். ஆகவே சட்டவிரோத மீன்பிடியிலிருந்து வட பகுதி மீனவர்கள் விமோசனம்பெற வழி சமைக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்க இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு பகுதி மீனவர்கள் மத்தியில் புரையோடியிருக்கும் மீன்பிடி பிரச்சனை தொடர்பாக சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில்;
வட மாகாணத்தின் கடல் பகுதியில் திட்டமிட்ட வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய் மற்றும் புல் மோட்டைப் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்குவலை மீன்பிடியில் தென்னிலங்கை மீனவர்கள் தீவிரமாக ஈடுபடுவதால் அப் பகுதியில் பூர்வீகமான வாழ்வாதார தொழிலாளக பாரம்பரிய சிறு தொழிலில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் அவர்களது நாளாந்த வாழ்வாதார வருமானங்கள் பறிக்கப்படுகின்றன. கடற்றொழில் நீரியல் வளத்துறை உடனடியாக சட்ட விரோத மீன்பிடி முறையை தடுத்து நிறுத்தி பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
வட மாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம், வடமராச்சி கிழக்கு, பூநகரி, நெடுந்தீவு, போன்ற கடற் பகுதிகளில் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களில் ஒரு பகுதியினர் சட்டவிரோத இழுவலை ரோலர்களைப் பயன்படுத்தி வடபகுதி கடல் வளங்கள் யாவற்றையும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் வடபகுதி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்துவதுடன் அண்மையில் யாழ் குருநகர் மீனவர்களுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். முடிவில்லாமல் தொடரும் அவல நிலைக்கு சம்பந்தப்பட்ட இரு நாட்டு அதிகார சக்திகளும் தலையிட்டு தீர்வு காணுங்கள்.
இலங்கையின் வடபகுதி மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருவதால் தங்களது வாழ்வாதாரத்தை நோக்கி புரிகின்ற மீனவத் தொழிலில் அவர்களது பாதுகாப்பையும் தொழிற் பாதுகாப்பையும் உறுதி செய்வது எல்லோரதும் கடமையாகும்.
ஆகவே பாதிப்புகளுக்கு உள்ளாகிவரும் ஒவ்வொரு மீனவர்களும் ஒற்றுமையாக குரல் கொடுத்து மீனவர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்வோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ