
posted 28th October 2021
முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் அந்த சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.சுபைர் மீதான அனுதாபப் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோது மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஏ.ஆர்.அமீர் இந்த அனுதாபப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இதனை கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.எஸ்.எம்.உமர் அலி வழிமொழிந்து உரையாற்றினார்.
இதன்போது மர்ஹூம் சுபைரின் துணிச்சலான அரசியல் செயற்பாடுகள், சமூக சேவைகள், அவரது ஆற்றல், ஆளுமைகளை நினைவுகூர்ந்து இவ்விரு உறுப்பினர்களும் கருத்துரைத்தனர்.
மருதமுனையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான மர்ஹூம் எம்.எச்.எம்.சுபைர் அவர்கள், 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று, உறுப்பினரானதன் பேரில் அந்த சபையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 1999ஆம் ஆண்டு சபை களையும் வரை அவர் இப்பதவிகளை வகித்திருந்தார். சமீபத்தில் அவர் காலமானதையடுத்து, அவருக்கு கல்முனை மாநகர சபை சார்பில் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இப்பிரேரணை கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்