
posted 3rd October 2021
நாடளாவிய ரீதியில், கொவிட் - 19 வைரஸ் தொற்று காரணமாகத்தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மத்தியஸ்த சபைகளின் நடவடிக்கைள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாட்டிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் ஸ்தாபிக்கப்பட்டு மிகச் சிறப்புற சேவையாற்றிவரும், மத்தியஸ்த சபைகளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீளவும் ஆரம்பிப்பதற்கு மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கொவிட் - 19 வைரஸ் பரவல் நிலையால் தற்காலிகமாக நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டிருந்த, மத்தியஸ்த சபைகளுக்கான (பிணக்குகள் கலந்துரையாடல்) சபை அமர்புகளை ஆரம்பிப்பிதற்கான புதிய அறிவுறுத்தல்களையும், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு விடுத்துள்ளது.
அனைத்து மத்தியஸ்த பயிற்சி உத்தியோத்தர்கள், மத்தியஸ்த நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (மத்தியஸ்த), மத்தியஸ்த சபை தவிசாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை மூலம் இதற்கான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, உரிய மத்தியஸ்த சபை பிரதேசத்திற்குரிய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் ஒத்துழைப்பு, மற்றும் சுகாதார வழிகாட்டுதலுக்கமைய பிணக்கு கலந்துரையாடலானது (சபை அமர்வு) ஆரம்பித்தல் வேண்டும் என்பதுடன்,
அவ்வாறு பிணக்கு கலந்துரையாடலின் போது விரைவாக தீர்மானம் எட்டப்பட வேண்டிய பிணக்குகளுக்கு கலந்துரையாடலில் முன்னுரிமை வழங்குதல் வேண்டுமெனவும்,
ஒவ்வொரு தினத்திற்கும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட வேண்டிய உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுத்தல் வேண்டும்மெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிக்க முடியாத நிலமையுள்ள மத்தியஸ்த சபைகள் தொடர்பான விபரங்களை, மத்தியஸ்த பயிற்சி உத்தியோத்தர்கள் ஊடாக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் டீ.ரி.டீ.கம்முனகே கோரியுள்ளார்.


ஏ.எல்.எம்.சலீம்