மீலாதுன் நபி விழா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாத் விழாவினை பள்ளிவாசல்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருடாந்தம் முஸ்லிம் மக்கள் நாட்டில் மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டங்களை பள்ளிவாசல்கள் உட்பட பொது வெளிகளிலும் பல்வேறு நிகழ்வுகளுடன் நடத்திவருவது வழக்கமாகும்.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 வைரஸ் பரவல் நிலமைகள் காரணமாக வழக்கமான முறைகளில் இக்கொண்டாட்ட நிகழ்வை நடத்த முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எம்.எல்.அன்வர் அலி புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதன்படி மீலாதுன் நபி தினத்தையொட்டி பள்ளிவாசல்களை மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்குமாறும், மீலாத் விழா தொடர்பான பாதாதைகளைக் காட்சிப்பத்துமாறும், மற்றும் மரநடுகையினை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18, 19, 20 ஆம் திகதிகளில் அல்லது மீலாதுன் நபி தினமான 19 ஆம் திகதி மாத்திரம் பள்ளிவாசல்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மதஸ்தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய கொவிட் - 19 வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான சுற்று நிருபங்களைப் பின்பற்றி சுகாதார நடைமுறைகளுடன் மீலாத் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீலாதுன் நபி விழா

ஏ.எல்.எம்.சலீம்