
posted 12th October 2021
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் விஷேட போக்குவரத்து சேவைகளுடன் விஷேட கழிவுடன் பருவகால சீட்டும் வழங்கப்படும் என மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தலைமையில் இன்று செவ்வாய் கிழமை (12.10.2021) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச அதிபர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில், மன்னார் கல்வி வலயத்தில் உள்ள 46 பாடசாலைகளில் 3784 மாணவர்களுக்கும், மடு கல்வி வலயத்தில் 44 பாடசாலைகளில் 2588 மாணவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட திகதியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதை மன்னார் கல்வி வலயம் மற்றும் மடு கல்வி வலயம் ஆகிய இரு கல்வி வலய பணிப்பாளர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது நடைமுறைப்படுத்த வேண்டியதும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதுமான சுகாதார ஒழுங்குகள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் இக் கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.
அத்துடன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லுவதற்கான போக்குவரத்து தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினருடனும் கலந்துரையாடியுள்ளோம். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்தும் மன்னாரிலிருந்தும் மற்றும் வவுனியாவிலிருந்தும் ஆசிரியர்களுக்காக விஷேட போக்குவரத்து சேவைகளை ஒழுங்கு செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலிருந்து தினமும் பயணம் செய்யும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான பருவகாலச் சீட்டு முப்பது வீதம் கழிவில் தாங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பயன் அடையக்கூடியதாக இருக்கும். ஆனால் நாங்கள் இரு பகுதினரையும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி முறையான உள்ளுர் சேவைகளையும் நடாத்தும்படியும் வேண்டியுள்ளோம்.
எமக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள முகக் கவசங்களை முறையே மன்னார் வலயத்துக்கு 8000 முகக் கவசங்களையும், மடு வலயத்தக்கு 4000 முகக் கவசங்களையும் மாணவர்களுக்காக இன்று (12) செவ்வாய் கிழமை இரு கல்வி வலய பணிப்பாளர்களிடம் கையளித்துள்ளோம்.
எதிர்வரும் 21 ந் திகதி இவ்விரு கல்வி வலயங்களுக்கு உட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளும், அத்தோடு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திணைக்களத்துக்கு கீழ் இயங்குகின்ற முன்பள்ளி பாடசாலைகளையும் இத் தினத்தில் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ