மயானத்தையும் உரிமை கோரும் அரசியல்!!!
மயானத்தையும் உரிமை கோரும் அரசியல்!!!

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு (இம்மாத) இடம்பெற்ற போது ஒரு கட்டத்தில் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். சந்திர சேகரம் ராஜனுக்குமிடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சபை அமர்வு பரபரப்புக்குள்ளாகியது.

கல்முனை மாநகர சபையின் குறித்த சபை அமர்வு மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், (செவ்வாய் பிற்பகல்) சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

ஒரு கட்டத்தில் அமர்வில் உரையாற்ற எழுந்த உறுப்பினர் சந்திர சேகரம் ராஜன் தமது 12 ஆவது வட்டாரத்திற்குள் அமைந்திருக்கும் பொது மயானத்திற்கு மதில் சுவர் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி மாநகர சபை அனுமதி வழங்கத் தாமதமாவதால் திரும்பிச் சென்றுவிடும் நிலையுள்ளதாகத் தெரிவித்ததுடன்,கிடைக்கப் பெற்றுள்ள 13 இலட்சம் ரூபா நிதியில் குறித்த மயானத்தின் முன்பக்க மதிற் சுவரே அமைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னரே மாகாண விசேட உதவித்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு கிடைத்தும் மாநகர சபை தாமதியாது வழங்க வேண்டுமெனவும் கோரினார்.

இந்த விடயத்தில் அடிவருடிகள், கொள்ளைக் கும்பல்களின் குறுக்கீட்டுக்கும், சில அரசியல் இலாபம் தேட முனைவோருக்கும் இடமளிக்க வேண்டாமெனவும் அவர் கூறினார்.

தாம் 12 ஆம் வட்டார உறுப்பினரென்பதாலும், எனது வட்டாரத்திற்குள்ளேயே குறித்த மயானம் அமைந்திருப்பதாலும், அங்குள்ள ஆலய முக்கியஸ்தர்கள், கழகங்கள் முன்பக்க மதிற் சுவரே அமைக்கப்பட வேண்டுமெனக் கோரி கடிதங்களை என்னிடம் தந்துள்ளதாலும் கட்டுவதற்கு அனுமதிக்குமாறும் சந்திரசேகரம் ராஜன் வாதிட்டார்.

இதன் போது பொது மயானம், மாநகர சபையின் சொத்து எனக் கூறிய மேயர் றகீப் இந்த மதிற் சுவர் நிர்மாண விடயத்தில் உங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்து ஒரு முடிவுடன் வாருங்கள் 100 வீதம் நான் உறுதுணையாக இருப்பேன். நிதியை வீணான வாதங்களால் திரும்பிச் செல்ல விடாதீர்கள் என கூறினார்.

எனினும் மேயருக்கும் உறுப்பினர் ராஜனுக்குமிடையில் காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து சபையில் பெரும் அமர்க்களமே ஏற்பட்டது.

நிலமை இப்படி தொடரும் வேளை மயானம் பொதுச் சொத்து எனவும், 12 ஆம் வட்டாரத்தில் அது அமைந்திருப்பதால் தான் சொல்வது போல் தான் நடக்க வேண்டுமென உறுப்பினர் ராஜன் வாதிட முடியாது என கூறிய மேயர் றகீப், எழுந்து நின்றவாறு வாதிட்ட உறுப்பினர் ராஜனை அமருமாறு பணித்தார். மேலும், இது அஜந்தாவில் இடம் பெறாத விடயம் எனக்கூறிய மேயர் அவரை ஆசனத்தில் அமருமாறு பணித்தார். மேயர் மீண்டும், மீண்டும் ராஜனை அமருமாறு கூறியும் “நான் அமரமாட்டேன்” என அவர் விடாப் பிடியாக அடம்பிடித்துக் கொண்டிருந்தமையால், மேயர் சிறிது நேரம் ஆசனத்தை விட்டு எழுந்து சென்றார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், தர்க்கத்தையும் ஏற்படுத்தியிருந்தும், ஒரு சிறு இடைவேளையின் பின்பு சபை மீண்டும் ஆரம்பமாகி அமைதியாக நடைபெற்று நிறைவுற்றது.

மயானத்தையும் உரிமை கோரும் அரசியல்!!!

ஏ.எல்.எம்.சலீம்