
posted 1st October 2021

மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் குழுவுடன் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளருடன் கூடிய களப்பயணம் ஒன்று இடம்பெற்றது.
இக் களப்பயணமானது 30.09.2021 அன்று வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் காரியாளயத்திலிருந்து ஆரம்பமானது.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி, சௌபாக்கிய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வலு ஊடுசாகுபடி இயந்திரங்களை விவசாயிகளுக்கு மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் அவர்களால் வழங்கப்பட்ட நிகழ்வும் இக் கள பயணத்தின்போதும் இடம்பெற்றது.
அடுத்து வட்டக்கண்டல் விவசாய போதனாசிரியர் பகுதிக்குச் சென்ற இக் குழுவினர் மன்னார் மாவட்டத்தில் முதன் முதலாக 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயி கே.ரமணனினால் மேற்கொள்ளப்பட்ட தினை செய்கையை பார்வையிட்டதுடன் அறுவடை விழாவும் இங்கு இடம்பெற்றது.
அடுத்ததாக ரி.அசோதரன் என்பவரால் சேதன முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வயலை இக் குழுவினர் பார்வையிட்டதுடன் 5000- 7000 கி.கி.(kg) இடைப்பட்ட கூட்டெரு தயாரிப்பையும் பார்வையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர்
பிரிவுக்குட்பட்ட பகுதிக்குச் சென்ற இக் குழுவினர் இப் பகுதியில் ஏ.சலமோன் துரம் என்பவரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மஞ்சள் தோட்டத்தையும் இக் குழுவினர் பார்வையிட்டனர்.
அடுத்து 2016 ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் விநாயகமூர்த்தி என்ற விவசாயிக்கு இழைய வளர்ப்பு வாழைக்குட்டி வழங்கப்பட்டபோது தற்பொழுது இது ஆறாவது சந்ததியாக அத் தோட்டத்தில் இருப்தையும், அதன் வாழைக் குலையின் பருமன் மாறாமல் 25 - 40 கி.கி (kg) இருப்பதையும் இக் குழுவினர் பார்வையிட்டனர். அத்துடன் இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தேனீர் வளர்ப்பையும் பார்வையிட்டதுடன் இவ்விவசாயி சிறந்த முறையில் இதன் உற்பத்தியை மேற்கொண்டு வருவதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.
மேலும் சௌபாக்கிய திட்டத்தில் 2021 இல் சிறந்த முறையில் உழுந்து செய்கையை மேற்கொண்டவர்களுக்கு சூரிய மின்கல வேலியை அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இறுதியாக இக் குழுவினர் மன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தை பார்வையிட்டதுடன் மாவட்ட விதை நெல் தேவையினை பூர்த்தி செய்யும் உற்பத்தியையும் பார்வையிட்டதுடன் கூட்டெரு தயாரிப்பு தொகுதி, நன்னீர் மீன் வளர்ப்பு தடாகம் என்பவற்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இக்
குழுவின் சகிதம் சென்று பார்வையிட்டு அதில் பெருமையும் கொள்வதாகவும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ