
posted 4th October 2021

அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்
மன்னார் மாவட்ட செயலகத்தினால் வருடந்தோறும் வழமையாக கொண்டாடப்படும் திருவள்ளுவர் விழாவானது இம்முறை நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்றுக் காரணமாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றபோதும் இது சம்பந்தமான போட்டிகள் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும் வலிகாட்டலுடனும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில் திருவள்ளுவர் தொடர்பான போட்டிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,
இந்த போட்டிகளில் மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்கள், மாவட்ட கலை இலக்கிய துறையினர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சு. திருக்குறள், மனனம் ஆகிய போட்டிகள் நிகழ்நிலை (சூம் செயலில்) வழியாக நடைபெறும் எனவும்,
ஏனைய போட்டிகளான கட்டுரை, கவிதை, சிறுகதை, குறுநாடகப்பிரதியாக்கம், ஒவியம் அகியவற்றில் பங்குபற்றுவோர் தமது ஆக்கங்களை தபால் மூலமாகவோ அன்றி நேரிலோ மாவட்ட செயலாளர் மாவட்ட செயலகம் மன்னார் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளின் விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் மன்னார் மாவட்ட செயலக இணையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் கலை இலக்கியத் துறையினர் மற்றும் அரச அலுவலர்கள் மத்தியில் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றி அறிதலையும் பயில்தலையும் மேம்படுத்தும் நோக்கத்துடனே இப் போட்டிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் அவர்களை 0775342441 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ