
posted 4th October 2021
மன்னார் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒரிரு கோஷ்டினர் கொரோனாவின் பீதியால் மக்கள் வீட்டினுள் முடங்கி இருந்த சமயத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி பொதுமக்களினதும், அரசினதும் காணிகளைத் தமக்கு சுதாகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டு உயர்மட்ட கவனத்துக்கும் பாதிப்படைந்தோர் கொண்டு சென்றுள்ளனர்.
பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற நேரங்களில் வெளியில் சென்று வராததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய இக் காணிகளை அபகரிக்கும் கோஷ்டினர் காணிகளுக்கு தூண்களை நட்டி அவைகளை விற்பனை செய்வதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக, மன்னார் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாதிப்படைந்தோர் உயர்மட்ட கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
தற்பொழுது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் மக்கள் இந்த காணி அபகரிப்பு கோஷ்டினர் தொடர்பாக பொலிசாரினது கவனத்துக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டப்பட்டு வருவதுடன் இந்த கோஷ்டினரின் செயல்பாடு தொடர்பாக உயர்மட்டத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் தலைமன்னார் வீதியில் அமைந்திருக்கும் எழுத்தூர் பழங்கோயிலடி கோரைக்குளம் பகுதி விஷமிகள் சிலரால் கள்ள உறுதி தயாரித்து மீண்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது
கடந்த மாதம் இதே போன்று பிரச்சினை எழுந்தபோது உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு மன்னார் பிரதேச செயலாளர் மன்னார் நகர சபை தவிசாளர் நில அளவைத் திணைக்களம், கமநல சேவைகள் உதவி ஆணையாளர் போன்றோர் வருகைதந்து குறித்த குளப்பகுதியை பார்வையிட்டு இந்த குளம் அரச காணி என்று ஊடகத்திற்கும் தெரிவித்திருந்தார்கள்
இந்த நிலையிலேயே ஒரு கோஷ்டினர் இந்த அரச காணியை விற்பனை செய்வதில் முனைந்திருப்பதாகவும் கொரோனா தொடர் முடக்க நிலை காரணமாக நில அளவை திணைக்களத்தினராலும் இதர அரச அதிகாரிகளாலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாமல் இருந்த நிலையில் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் கள்ள உறுதிகள் தயாரித்து மீண்டும் குறித்த குளப்பகுதிகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாஸ் கூஞ்ஞ