
posted 29th October 2021
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட பரிகாரி கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் மணல் அகழ்வினால் சுற்று சூழல் பாதிப்பு அடைவதாகவும் இதனால் பொதுத் தொல்லை எற்படுவதாகவும் தெரிவித்து நானாட்டான் பிரதேச சபையினால் மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிபதி பெருமாள் சிவகுமார் இரு தரப்பு சட்டத்தரனிகளின் சம்மதத்துடன் இதற்கான நான்கு திணைக்களங்களின் நிபுணத்துவம் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட பரிகாரி கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் அடியாச்சிக்குளம் மற்றும் ஆத்திமோட்டை ஆகிய இடங்களில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால் அப்பகுதியில் சுற்றாடல் பாதிக்கப்படுவதாக நானாட்டான் பிரதேச சபையினால் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 12.10.2021 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
இவ் வழக்கு விசாரனை இன்று வெள்ளிக்கிழமை (29.10.2021) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டது.
அதாவது இப்பகுதியில் மணல் அகழ்வு இடம் பெறுவதனால் இப் பகுதிக்குள் கடல்நீர் உட்புகுவதுடன் பாரிய அளவில் இதன் வளங்கள் வெளியேறி வருவதுடன் மரங்கள் அதிகமாக பிடுங்கப்பட்டு சுற்றாடல் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவே தெரிவித்து இவ் வழக்கானது நானாட்டான் பிரதேச சபையின் தீர்மானத்துக்கு அமைவாக மணல் அகழ்வு செய்வோருக்கு எதிராக பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதிவாதிகளுக்கு இவ் வழக்கு தொடர்பாக அழைப்பானை விடுக்கப்பட்ட நிலையில் இதன் பிரதிவாதிகள் இன்று (வெள்ளிக்கிழமை 29.10.2021) இவ் வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரனி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் சட்டத்தரனிகள் முன்லையாகி இருந்தனர்.
அத்துடன் வழக்காளியாக நானாட்டான் தவிசாளர் பரஞ்சோதி மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
பிரதிவாதிகள் சார்பாக ஆஐராகி வாதிட்ட சட்டத்தரனி தெரிவிக்கையில் எங்கள் கட்சிகாரர் சட்டத்துக்கு விரோதமாக செயல்படாது அனுமதி பெற்ற நிலையிலேயே மணல் அகழ்வை மேற்கொண்டு வருவதாகவும், நாங்கள் பொதுத் தொல்லையை ஏற்படுத்தக் கூடிய எந்த செயல்பாடுகளையும் செய்யவில்லையெனவும் தங்கள் வாதத்தை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து இம் மணல் அகழ்வு சட்டத்துக்கு புறம்பாக இடம்பெறுகின்றதா அத்துடன் வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களை மீறி சூழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றதா என்பதை ஆராய்வதற்காக நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவினரை அமைப்பதற்காக நீதிபதி இரு தரப்பினரைக் கேட்டுக் கொண்ட போது இரு தரப்பு சட்டத்தரனிகளும் இதை ஏற்றுக் கொண்டனர்.
இதற்கமைய மன்னார் மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர், மன்னார் மாவட்ட நீர்பாசன பொறியியலாளர் புவிதரிதசுரங்க பணியக பணிப்பாளர் அத்துடன் சுற்று சூழல் அதிகார சபை பணிப்பாளர் ஆகிய நான்கு திணைக்களங்கள் அடங்கிய நிபுணத்துவம் கொண்ட குழு இது விடயத்தில் அமைக்கப்பட்டு இவர்களுக்கு அறிவுறுத்தலும் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
இதைத் தொடர்ந்து இவ் வழக்கு எதிர்வரும் 19.11.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

வாஸ் கூஞ்ஞ