பைசர் தடுப்பூசி வழங்கல்
பைசர் தடுப்பூசி வழங்கல்

பணிப்பாளர் டாக்டர். தௌபீக்

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள 18 வயதுக்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் கொழும்பு மாவட்டத்திலுள்ள 18 முதல் 19 வயது வரையான மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இன்று முதல் நாடளாவிய ரீதியில் குறித்த வயது மாணவர்களுக்கு தடுப்பூசி (பைசர்) செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாவட்டங்களிலும் 18 – 19 வயது உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்றுவருவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

இத்தடுப்பூசி வழங்கல் நாளை 22 ஆம் திகதியும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், அடுத்தவாரமும் இதனைத் தொடரும் நிலை வரலாமெனவும்,
குறித்த மாணவர்கள் இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாது, பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்திக் கொள்வதில் முனைப்புக் கொள்ள வெண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பெற்றார் அல்லது பாதுகாவலரின் சம்மதம் பெற்றே இந்த பைசர் தடுப்பூசி வழங்கப்படுமெனவும் பணிப்பாளர் டாக்டர் தௌபீக் மேலும் தெரிவித்தார்.

வெளியூர்கள், வெளிமாட்டங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தமக்கு அருகிலுள்ள பாசடாலைகளுக்குச் சென்று இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், கிழக்கு மாகாணத்தில் கொவிட் - 19 பரவலும், அதனாலான மரணங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் செப்டம்பர் முதலாம் வாரம் 4400 கொவிட் - 19 தொற்றாளர்களும், 100 மரணங்களும் சம்பவித்ததுடன் 2 ஆம் வாரத்தில் 3300 தொற்றாளர், 80 மரணங்கள், 3 ஆம் வாரத்தில் 2000 தொற்றாளர் 67 மரணங்கள், 4 ஆம் வாரத்தில், 1104 தொற்றாளர்களும், 42 மரணங்களும், 5 ஆம் வாரத்தில் 801 தொற்றாளர்களும், 12 மரணங்களும் சம்பவித்துள்ள கணிப்பீட்டு நிலையில்,
மேலும் குறைந்து அக்டோபர் 1 ஆம் வாரத்தில் 612 தொற்றாளர்களும், 22 மரணங்களும், 2 ஆம் வாரத்தில் 400 தொற்றாளர்களும், 11 மரணங்களும் சம்பவித்துள்ளமையைச் சுட்டிக்காட்சியுள்ள பணிப்பாளர் டாக்டர். தௌபீக்,
தடுப்பூசி வழங்கலைக் கிரமமாகவும், மக்களின் ஆர்வத்துடனும் மேற்கொண்டதன் பயன் இதுவெனவும் சுட்டிக்காட்டினார்.

எனினும் கொவிட் தணிந்து தற்சமயம் ஏற்பட்டுள்ள சுமுக நிலை தொடர வேண்டுமென்பதில் சகலரும் முழு பாதுகாப்பு அக்கறையுடன் செயற்பட வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன் கொவிட் 19 வைரஸ் புதிய வகையான திரிபுகளோடு தொற்று நிலமை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளதால், கொவிட் தொடர்பில் நாம் கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடுகளையும், சுகாதார அறிவுறுத்தல்களையும் தொடர்ந்தும் பேணிவர வேண்டுமெனவும் பணிப்பாளர் டாக்டர். தௌபீக் அறிவுறுத்தியுள்ளார்.

பைசர் தடுப்பூசி வழங்கல்

எ.எல்.எம்.சலீம்